போர் குற்றச்சாட்டுக்கு எதிராக ICC பிறப்பித்த பிடி வாரென்ட் உத்தரவு, யூதர்களுக்கு எதிரான மனப்பான்மை: நெதன்யாகு
'என் மீது சுமத்திய போர் குற்றச்சாட்டுக்கு, யூதர்களுக்கு எதிரான மனப்பான்மையே காரணம். இதற்கு தக்க பதிலடி அளிக்கப்படும்' என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் ஆகியோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நேற்று கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. இதற்கிடையில், இந்த உத்தரவிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நெதன்யாகு கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: "ஈரான், சிரியா, ஏமன் ஆகிய நாடுகளில் நடந்த போர் குற்றங்களுக்கு எதிராக நீதிமன்றம் எதுவும் செய்யவில்லை." என்றும் கூறினார்.
பொய் குற்றசாட்டுகள் என நெதன்யாகு கருத்து
"என் மீதும், இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் மீதும் பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. எங்கள் முயற்சி பொதுமக்களின் உயிரை காப்பாற்றுவதாகும். இஸ்ரேலிய அதிகாரிகள் காஸா மக்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். காஸாவின் 97 சதவீத மக்களுக்கு போலியோ தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த முக்கியமான உதவிகளைப் புறக்கணித்ததாக குற்றம் சாட்டும் நீதிமன்றத்துக்கு இது தெரியவில்லையா?" என்று அவர் கூறியுள்ளார். "இஸ்ரேலிய பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்த, ஆண்களின் தலையை துண்டித்த ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்த நீதிமன்றம் எதுவும் செய்யவில்லை." என்றார். நெதன்யாகு மேலும்,"எனக்கு எதிரான போர் குற்றச்சாட்டுக்கு யூதர்களுக்கு எதிரான மனப்பான்மையே காரணம். இதற்கு தக்க பதிலடி அளிக்கப்படும்." என சூளுரைத்தார்.