போரில் வெற்றி பெறும் வரை போராடுவோம்- இஸ்ரேல் அறிவிப்பு
ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போரில் வெற்றி பெறும் வரை போராடுவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கிய போர், ஒவ்வொரு நாளும் மென்மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில், இதுவரை 5,000க்கும்மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து பேசியவர், "இஸ்ரேலில் இருந்து கடத்தப்பட்டவர்களில் இருவரை ஹமாஸ் விடுவித்துள்ளது." "கடத்தப்பட்ட மற்றும் காணாமல் போன அனைவரையும் மீட்பதற்கான முயற்சியை நாங்கள் கைவிடவில்லை. அதே சமயம் வெற்றி பெறும் வரை தொடர்ந்து போராடுவோம்" என்றார். இந்தப் போரில் இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, அதிக யூதர்கள் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இரு அமெரிக்க பிணைய கைதிகளை விடுவித்த ஹமாஸ்
ஏழாம் தேதி இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில், ஹமாஸ் அமைப்பு 200க்கும் மேற்பட்டோரை பிணையக் கைதிகளாக பிடித்துச் சென்றது. இந்நிலையில், அமெரிக்கர்களான 59 வயதான ஜூடித் டாய் ரானன் மற்றும் அவரது மகள் நடாலி, 17, ஆகிய இருவரை ஹமாஸ் நேற்று விடுதலை செய்தது. இவர்கள் காஸா எல்லைப் பகுதியில் இஸ்ரேல் ராணுவப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இரண்டு வாரத்திற்கு பிறகு முதல் முறையாக, ஹமாஸ் இரண்டு பிணையக் கைதிகளை விடுதலை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அதிபர் பைடனின் கருத்து குறித்து வெள்ளை மாளிகை விளக்கம்
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்க அதிபர் பைடனிடம், காசாவில் உள்ள பிணைய கைதிகள் மீட்கப்படும் வரை இஸ்ரேல் தனது தரைவழி தாக்குதலை தாமதப்படுத்த வேண்டுமா என ஒரு செய்தியாளர் கேட்டார். அதற்கு அதிபர் பைடன் ஆம் என பதிலளித்தார். ஆனால் அமெரிக்க வெள்ளை மாளிகை அதிபர் அந்த கேள்வியை சரியாக கேட்கவில்லை என விளக்கம் அளித்துள்ளது. "அந்த செய்தியாளர் தூரமாக இருந்ததால் அவர் கேட்டது அதிபருக்கு சரியாக கேட்கவில்லை". "அந்தக் கேள்வி அதிபருக்கு மேலும் பல பிணையக் கைதிகள் விடுதலை செய்யப்படுவதை எதிர்பார்க்கிறீர்களா என்பது போன்று கேட்டது" என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதிபர் தனது விமானத்தில் ஏறும்போது, இந்த கேள்வி கேட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தாக்குதலை தாமதப்படுத்த கூறும் ஐரோப்பிய நாடுகள்
ஹமாஸ் அமைப்பை முழுவதுமாக அளிக்கும் வரை ஓயமாட்டோம் என கூறியுள்ள இஸ்ரேல், காஸா பகுதிக்குள் தரை வழியாக தாக்குதல் நடத்தவும் முடிவு செய்துள்ளது. தற்போது இந்த தரைவழி தாக்குதலை தாமதப்படுத்த, ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலை கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹமாஸ் இன்னும் 200க்கும் மேற்பட்டோரை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்திருக்கும் நிலையில், இஸ்ரேல் தரைவழி தாக்குதலை தொடங்கினால் பிணைய கைதிகளை மீட்பதில் தாமதம் ஏற்படும் என ஐரோப்பிய நாடுகள் கருதுகின்றன.