பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான சாத்தியமான ஒப்பந்தம் குறித்து நெதன்யாகு சூசகம்
காசாவில் ஹமாஸ் அமைப்பினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான சாத்தியமான ஒப்பந்தம் குறித்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூசகமாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் என்பிசி தொலைக்காட்சியிடம் பேசிய அவர், "நான் அதைப் பற்றி எவ்வளவு குறைவாகச் சொல்கிறேனோ, அவ்வளவு அதிகமாக அது செயல்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று நினைக்கிறேன்" என தெரிவித்தார். ஒப்பந்தம் குறித்து அதிகமாக பேசுவது, அதை பாதித்து விடுமோ என்ற அச்சத்தில் பிரதமர் நெதன்யாகு சூசகமாக ஒப்பந்தம் குறித்து பேசியுள்ளார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி, இஸ்ரேலுக்குள் தரை வழியாக ஊடுருவிய ஹமாஸ் ஆயுத குழுவினர், 240க்கும் மேற்பட்டவர்களை பணயக்கைதிகளை பிடித்து சென்றனர். இதில் தற்போது வரை, இஸ்ரேலைச் சேர்ந்த இருவரும், அமெரிக்காவைச் சேர்ந்த இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
போர் நிறுத்தம் கோரும் ஹமாஸ், மறுக்கும் இஸ்ரேல்
போர் நிறுத்தம் அறிவிக்கப்படும் வரை பணைய கைதிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என ஹமாஸ் அறிவித்துள்ளது. மேலும், இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் காசாவில் நடத்திய தரைவழி தாக்குதலில் 40 பணைய கைதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு இடமில்லை என திட்டவட்டமாக மறுத்துள்ள இஸ்ரேல், போர் நிறுத்தம் 'சரணடைவதற்கு சமமானது' எனவும் தெரிவித்துள்ளது. காசா பகுதிக்குள் நிவாரண பொருட்கள் செல்லவும், அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறவும், போரில் தினசரி 4 மணிநேர இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. இந்நிலையில், பணைய கைதிகளை மீட்பதற்கான ஒப்பந்தம் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பேசியிருப்பதால், போர் நிறுத்தத்திற்கான சாத்திய கூறுகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.