இஸ்ரேல்-ஹமாஸ் போர்: 24 மணி நேரத்தில் 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலி; பொதுமக்களைப் பாதுகாக்க பைடன் அழுத்தம்
காசாவில் இஸ்ரேலின் தாக்குதலால் கடந்த 24 மணி நேரத்தில் 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்ட நிலையில், அங்குள்ள பொதுமக்களை பாதுகாக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமருக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். "மனிதாபிமான உதவி நடவடிக்கையை அதிகரிப்பது, உட்பட பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய முக்கியமான அவசியத்தையும், போர் நடக்கும் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதிப்பதன் முக்கியத்துவத்தையும், அதிபர் பைடன் வலியுறுத்தினார்" என தொலைபேசி உரையாடல் குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"போர் நிறுத்தம் கேட்கவில்லை"
மேலும், இருநாட்டு தலைவர்களும் போரின் குறிக்கோள்கள் குறித்து விவாதித்ததாகவும், எஞ்சியுள்ள பணயக் கைதிகளை மீட்பதற்கான நடவடிக்கை குறித்து பேசியதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது. முன்னதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன்,"தனிப்பட்ட" மற்றும் "நீண்ட உரையாடல்களை" நிகழ்த்தியதாக தெரிவித்த அமெரிக்கா அதிபர், தான் போர் நிறுத்தத்தை கேட்கவில்லை என விவரித்தார். இதுக்கு அமெரிக்க அதிபர் உடனான தொலைபேசி உரையாடல் குறித்து இஸ்ரேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் நெதன்யாகு ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்காவின் முடிவுக்கு பாராட்டு தெரிவித்தார். இஸ்ரேலின் குறிக்கோள் நிறைவேறும் வரை, போர் நடைபெறும் என்பதை நெதன்யாகு அமெரிக்க அதிபரிடம் தெளிவுபடுத்தி விட்டதாக தெரிகிறது.
24 மணி நேரத்தில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்
அக்டோபர் 7 முதல் நடைபெற்று வரும் இப்போரில், 1,200 இஸ்ரேலிகள் ஹமாஸ் தாக்குதலால் கொல்லப்பட்டனர். இந்நிலையில், இஸ்ரேல் நடத்தி வரும் பதிலடித் தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்ட நிலையில், 368 நபர்கள் காயமடைந்துள்ளதாக, ஹமாஸ் நிர்வகிக்கும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில், இரண்டு வீடுகளில் தங்கி இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 90 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் ஆகிய தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.