Loading...
நிபந்தனைகள் நிறைவேறும் வரை பேச்சுவார்த்தையும் கிடையாது, ஹார்முஸ் ஜலசந்தியும் திறக்கப்படாது: ஈரான் திட்டவட்டம்
நிபந்தனைகள் நிறைவேறும் வரை அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என ஈரான் அறிவித்துள்ளது

நிபந்தனைகள் நிறைவேறும் வரை பேச்சுவார்த்தையும் கிடையாது, ஹார்முஸ் ஜலசந்தியும் திறக்கப்படாது: ஈரான் திட்டவட்டம்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 12, 2026
10:08 am

செய்தி முன்னோட்டம்

வாஷிங்டன் தன் தரப்பிலிருந்து ஏழு நிபந்தனைகளை முழுமையாக நிறைவேற்றும் வரை ஹார்முஸ் நீரிணையை திறக்கவோ அல்லது அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ மாட்டோம் என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், தங்களது கோரிக்கைகளுக்கு அமெரிக்கா தரப்பில் அதிகாரப்பூர்வ பதில் வரும் வரை காத்திருப்பதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு இப்போது அமெரிக்காவின் கையில்தான் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

காலிபாஃப் எச்சரிக்கை

"அமெரிக்கா படுதோல்வியைச் சந்திக்கும்"

அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த காலிபாஃப், அமெரிக்காவுக்கான தங்களுடைய தெளிவான நிபந்தனைகள் அடங்கிய பட்டியலை ஏற்கனவே அனுப்பிவிட்டதாகக் கூறினார்.

மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை எச்சரித்த அவர்,"ஒருவேளை டிரம்ப் மீண்டும் ஈரானுக்கு எதிராக போரைத் தொடங்க முடிவு செய்தால், அவர் மற்றொரு படுதோல்வியைச் சந்திக்க நேரிடும்" எனத்தெரிவித்தார்.

ஈரான் பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரி மொஹ்சென் ரெசாய் கூறுகையில், தற்போது இரு நாடுகளுக்கும் இடையே எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும், அமெரிக்காவின் தெளிவான பதிலுக்காக காத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், வெள்ளை மாளிகையில் கத்தார் மத்தியஸ்தர்களை சந்தித்து பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை தேவையைத் தவிர்த்தாலும், ஈரானின் தற்போதைய போர் நிறுத்த பரிந்துரையை ஏற்றுக்கொள்ளவில்லை.

மிரட்டல்

ஐரோப்பிய அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும்

அல்-மயாடீன் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மொஹ்சென் ரெசாய், மத்திய கிழக்கு பகுதிக்கு அப்பால் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தத் தயங்காது என எச்சரித்துள்ளார்.

"ஐரோப்பிய நாடுகள் அல்லது வேறு தொலைதூரப் பகுதிகளில் உள்ள அமெரிக்கத் தளங்களிலிருந்து போர் விமானங்கள் ஈரானை குண்டுவீசித் தாக்கப் பயன்படுத்தப்பட்டால், அந்த ராணுவத் தளங்களையும் நாங்கள் தாக்குவோம்" என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அமெரிக்காவின் ஏவுகணைகளுக்கு எட்டாத தொலைவில் உள்ளதாக வாஷிங்டன் நம்பும் தொலைதூர ராணுவ நிலைகளையும் தாக்கும் திறன் தமக்கு உண்டு என அவர் எச்சரித்தார்.

ADVERTISEMENT

நிபந்தனைகள்

ஈரானின் நிபந்தனைகள் என்னென்ன?

ஈரான் முன்வைத்துள்ள கோரிக்கைகளில் முக்கியப் பகுதிகள்:

1. ஈரானுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள அமெரிக்க பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும்.

2. முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானிய சொத்துகளை விடுவிக்க வேண்டும்.

3. ஈரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்கா மேற்கொண்டுள்ள கடற்படை முற்றுகையை கைவிட வேண்டும்.

4. போரால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

5. லெபனான் உள்ளிட்ட பிராந்திய முனைகளில் நடந்துவரும் போரை முழுமையாக நிறுத்த வேண்டும்.

AP தகவலின்படி, அமெரிக்கா இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால், அதன் ஆறாவது நாளில் ஹார்முஸ் நீரிணை திறக்கப்படும் என்றும், ஏழாவது நாள் இறுதி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்றும் ஈரானின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT