Loading...
ஹார்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்களுக்கு விலக்கு: ஈரான் நாடாளுமன்றக் குழுவின் முக்கிய அறிவிப்பு
இந்திய கப்பல்களுக்கு போக்குவரத்து பயணக் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது

ஹார்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்களுக்கு விலக்கு: ஈரான் நாடாளுமன்றக் குழுவின் முக்கிய அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 04, 2026
07:07 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே தொடரும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், வியூக முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் இந்திய கப்பல்களுக்கு போக்குவரத்து பயணக் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை குழுவின் துணைத் தலைவர் அமீர் ஹயாத் மொகாதம் இத்தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். இந்தியாவை தவிர சீனா, ஈராக் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் கப்பல்களுக்கும் இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

காரணங்கள்

ஈரானின் இந்த முடிவுக்கு பின்னணியில் உள்ள முக்கியக் காரணங்கள்

பொருளாதாரத் தடைகள் மற்றும் போர்ச் சூழலால் சர்வதேச நிதி பரிவர்த்தனைகளில் சிக்கலை எதிர்கொள்ளும் ஈரான், தனது நாட்டின் அத்தியாவசிய மருத்துவத் தேவைகளுக்காக இந்திய மருந்துத் துறையை பெரிதும் நம்பியுள்ளது.

இந்திய கப்பல்களுக்கு அனுமதி அளிப்பதன் மூலம் மருந்து விநியோகம் தடையின்றி நடப்பதை ஈரான் உறுதி செய்கிறது.

சீனாவுடனான வர்த்தகம் மற்றும் எரிசக்தி உறவுகளை தக்கவைத்துக்கொள்வதோடு, சர்வதேச அரங்கில் பெய்ஜிங்கின் தூதரக ஆதரவை பெறுவதற்காகச் சீன கப்பல்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் சீன கப்பல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், அவற்றிடமிருந்து ஈரான் போக்குவரத்துச் கட்டண வசூலிப்பதாகக் கூறப்படுகிறது.

கத்தார் மற்றும் ஈராக் ஆகிய அண்டை நாடுகளுடனான வர்த்தக மற்றும் தூதரக சமநிலையை பேணுவதும் ஈரானின் முதன்மை நோக்கமாகும்.

நிவாரணம்

இந்தியாவுக்கு இது ஏன் மிகப்பெரிய நிவாரணம்?

பாரசீக வளைகுடாவையும் ஓமன் வளைகுடாவையும் இணைக்கும் குறுகிய கடல் வழியான ஹார்முஸ் நீரிணை, இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பிற்கு மிக அத்தியாவசியமான பாதையாகும்.

இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 45 சதவீதமும், சமையல் எரிவாயு (LPG) இறக்குமதியில் 90 சதவீதமும் இந்த பாதை வழியாகவே இந்தியாவை வந்தடைகின்றன.

கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் இயற்கை எரிவாயுவில் மூன்றில் இரண்டு பங்கு இந்த நீரிணை வழியாகவே கடந்து செல்கிறது.

அமெரிக்க-ஈரான் மோதலால் உலகளவில் கடல்சார் எரிபொருள் போக்குவரத்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், ஈரானின் இத்தளர்வு இந்திய கப்பல் நிறுவனங்களுக்கும், நாட்டின் எரிசக்தி சந்தைக்கும் தற்காலிகப் பெருமூச்சை அளித்துள்ளது.

ADVERTISEMENT