மண்டை ஓடு உடைந்து, ரத்தம் சிந்திய நிலையிலும் 170 பேரின் உயிரைக் காப்பாற்றிய இந்திய பைலட்; நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்
செய்தி முன்னோட்டம்
துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு சென்ற ஃப்ளைதுபாய் விமானத்தில், ஓமன் நாட்டைச் சேர்ந்த இணை பைலட் ஹமாம் அல்-ஹம்மாமி என்பவர் விமானத்தை கடத்தி விபத்துக்குள்ளாக்கும் நோக்கில் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தினமும் ஒரு புது தகவல் வெளியாகி வருகிறது. உலகமே, தன் உயிரை பணயம் வைத்து விமானத்திலிருந்து பயணிகளின் உயிரை காப்பாற்ற போராடிய இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரை கொண்டாடி வரும் நேரத்தில், காக்பிட்டில் அவர் தாக்கப்பட்ட தருணம் மற்றும் அதை தொடர்ந்து அவரின் உயிரை காப்பாற்றிய பயணிகளின் வாக்குமூலங்களை வைரலாகி வருகின்றன.
இந்திய கேப்டன்
தலையில் பலத்த காயம்: வீரத்துடன் செயல்பட்ட இந்திய கேப்டன்
38 வயதான இந்திய கேப்டன் ஸ்மித் மச்சார் காக்பிட்டில் இருந்தபோது, இணை பைலட் கோடரியால் அவரது தலையில் பலமாக தாக்கினார்.
இதனால் மண்டை ஓடு உடைந்து, கைகளில் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வழிந்த நிலையிலும், கேப்டன் ஸ்மித் மன உறுதியுடன் செயல்பட்டு காக்பிட் கதவைத் திறந்தார்.
கண் பார்வை மங்கிய நிலையிலும் அவர் கதவைத் திறந்ததால், வெளியிலிருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்திய இணை பைலட்டைக் கட்டுப்படுத்தினர்.
பின்னர், விமானத்திலிருந்த ஓய்வுபெற்ற இரு பைலட்டுகள் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்து, விமானத்தை சவுதி அரேபியாவின் தபூக் நகரில் பாதுகாப்பாகத் தரையிறக்கினர்.
பல் மருத்துவர்
கேப்டன் உயிரை காப்பாற்ற 45 நிமிடங்கள் போராடிய பல் மருத்துவர்
விமானத்தில் பயணித்த இஸ்ரேலைச் சேர்ந்த ஜார்ஜிய பல் மருத்துவர் ஷோதா முசாயேவ், படுகாயமடைந்த கேப்டன் ஸ்மித்திற்கு 45 நிமிடங்கள் தொடர்ந்து முதலுதவி சிகிச்சையளித்தார்.
"கேப்டனின் தலையிலிருந்தும் கையிலிருந்தும் கடுமையான ரத்தப்போக்கு இருந்தது. அவரை நினைவிழக்க விடாமல் தடுக்க அவரது குடும்பத்தைப் பற்றியும் குழந்தைகள் பற்றியும் பேசிக்கொண்டே இருந்தேன். அவர் 'நான் வாழ விரும்புகிறேன்' என்று கூறினார்" என மருத்துவர் ஷோதா முசாயேவ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
பாராட்டுக்கள்
சர்வதேச அளவில் குவியும் பாராட்டுக்கள்
170-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரின் தீரத்தைப் பாராட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் நேரில் மற்றும் தொலைபேசி வாயிலாக வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
குஜராத் அரசு அவருக்கு 'விசிஷ்ட் குஜராத் கரிமா விருது' அறிவித்துள்ளது.
தற்போது கேப்டன் ஸ்மித் மச்சார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பின் நலமாக மீண்டு வருகிறார்.
இச்சம்பவம் குறித்து சர்வதேச அமைப்புகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.