அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் மீது இந்தியா விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்திய-அமெரிக்க தலைவர்கள் வலியுறுத்தல்
அமெரிக்க-கனடிய குடிமகனான காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்ல சதி செய்ததாகக், இந்தியர் மீது குற்றம் சாட்டப்பட்டதற்கு, இந்திய-அமெரிக்க அரசியல் தலைவர்கள் தங்களது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர். இப்பிரச்சினை சரியான முறையில் கவனிக்கப்படாவிட்டால், அது அமெரிக்க-இந்திய உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என, நிகில் குப்தாவின் குற்றப்பத்திரிகை குறித்த அதிபர் பைடன் அரசின் இரகசிய விளக்கத்திற்குப் பிறகு அவர்கள் எச்சரித்தனர். அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று செக் குடியரசு நாட்டில், கடந்த ஜூலை மாதம் குப்தா கைது செய்யப்பட்டதாக அந்நாடு தெரிவித்துள்ளது. அவர் கைது செய்யப்பட்டதற்கு இரண்டு மாதங்களுக்கு பின்னர், அவரை நாடு கடத்த அமெரிக்கா கோரியிருந்தது.
அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு அமைத்ததற்கு இந்தியாவிற்கு பாராட்டு
நேற்று நடைபெற்ற குற்றப்பத்திரிகை விளக்கத்தில், அமெரிக்க பிரதிநிதிகள் அமி பெரா, பிரமிளா ஜெயபால், ரோ கண்ணா, ராஜா கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஸ்ரீ தானேதர் ஆகியோர் பங்கேற்றனர். "அமெரிக்க-இந்திய உறவுகள் நம் இருவரின் வாழ்விலும் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம், ஆனால் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகள், சரியான முறையில் கவனிக்கப்படாவிட்டால், இந்த மிக முக்கியமான உறவுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நாங்கள் கவலைப்படுகிறோம்," என விளக்கத்திற்கு பின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருந்தனர். மேலும் இந்த விவகாரத்தை விசாரிப்பதற்காக இந்தியா குழு அமைத்துள்ளதை வரவேற்றுள்ள அவர்கள், இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, இது போன்று மீண்டும் நடக்காததை இந்தியா உறுதி செய்ய வேண்டுமென அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
நிகில் குப்தா மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் என்ன?
காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் அமெரிக்காவில் கொலை செய்ய, இந்தியாவை சேர்ந்த நிகில் குப்தா என்பவர் ஒரு கொலைகாரனை பணியமர்த்த முயன்றதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. மேலும், குப்தா இந்திய அதிகாரியின் அறிவுறுத்தலின் பேரிலேயே இவ்வாறு செய்ததாகவும், இந்திய அதிகாரி மற்றும் குப்தா ஆகியோர் டெல்லியில் சந்தித்து இது குறித்து திட்டமிட்டதாகவும், அமெரிக்கா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கை கூறுகிறது. குப்தா பணியாமர்த்த முயன்ற நபர் ரகசிய பெடரல் ஏஜென்ட் என்பதால், இந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டது. இதுகுறித்துகடந்த மாதம் வெளியான தகவல்கள், அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. முன்னதாக குப்தா தனக்கு வேண்டிய நபர் மூலம், தனது கைதில் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக, இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.