இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல் எவ்வாறு நிகழ்த்தப்பட்டது?
பாலஸ்தீனத்தின ஆயுதக் குழுவான ஹமாஸ் இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தியதில் 300-க்கும் மேற்பட்ட இஸ்ரேலிகள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் பிணைய கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதை அடுத்து "இஸ்ரேல் போரில் இறங்கி உள்ளது" என அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு அறிவித்தார். மேலும் அவர் காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் இந்த தாக்குதலுக்கான விலையை வழங்கும் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதல் எவ்வாறு நடத்தப்பட்டது என பார்ப்போம்.
காலை தொடங்கிய ஏவுகணை தாக்குதல்
நேற்று காலை 6:30 மணியளவில் 5,000 ஏவுகணைகள் மூலம் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் தாக்குதலை நிகழ்த்தத் தொடங்கியது. அபாய ஒளி கேட்கத் தொடங்கியதும் இஸ்ரேலி மக்கள் தங்கள் வீடுகளில் தஞ்சம் புக தொடங்கினர். இஸ்ரேலின் தெற்கு எல்லையில் வாகனங்கள் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட பாராகிளைடர்கள் உள்ளிட்டவற்றின் உதவியுடன் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் ஊடுருவ தொடங்கி அப்பாவி மக்களை சுடத் தொடங்கினர். இஸ்ரேலின் எல்லைகளை ஹமாஸ் அமைப்பினர், ராக்கெட் தாக்குதல் தொடங்கப்பட்ட காலை வேளையில் தகர்ப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியானது.
இஸ்ரேல் பாலைவனத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த நடன விருந்தில் பங்கேற்று இருந்தவர்களை ஹமாஸ் ஆயுத குழுவினர் சுடும் காட்சிகள்.
பதில் தாக்குதலை தொடுத்த இஸ்ரேல்
ஹமாஸ் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேல் அரசு தனது பதில் தாக்குதலை தொடங்கியது. காலை 10 மணி அளவில், எரெழ் எல்லைக் கடப்பு, ஜிக்கிம் தளம் மற்றும் காசா பிரிவு தலைமையகமான ரெய்ம் ஆகிய இஸ்ரேலின் 3 ராணுவ முகாம்களுக்குள் ஆயுதக் குழுவினர் ஊடுருவினர். அதன் பின் இஸ்ரேலின் ராணுவ டேங்குகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி, ஹமாஸ் ஆயுத குழுவினர் பொதுமக்கள் மீதும் குடியிருப்புகள் மீதும் தாக்குதல் நடத்த தொடங்கினர். இஸ்ரேல் படைகளும் பதில் தாக்குதலை நிகழ்த்தினர். தொடர் தாக்குதல்களால் இருதரப்பிலும் 600 பேர் கொல்லப்பட்டு இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் ஹமாஸ் ஆயுதக் குழுவினரால் பிணைய கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
தாக்குதலை கண்டித்துள்ள அமெரிக்கா
இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்துவதால், காஸாவில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம் புகுமாறு இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. தெற்கு இஸ்ரேல் பகுதியில் ஹமாஸ் ஆயுத குழுவினருக்கும் இஸ்ரேல் படைகளுக்கும் இடையே தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் மீதான ஹமாஸ் ஆயுத குழுவினரின் தாக்குதலை அமெரிக்கா கண்டித்து உள்ளது. இது குறித்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேலுக்கு அமெரிக்கா உறுதியான ஆதரவை வழங்கும் எனக் கூறியுள்ளார்.