ஹமாஸ் தலைவர் ஹனியே கொல்லப்பட்டது எப்படி? அவரின் விருந்தினர் மாளிகைக்குள் வெடிகுண்டு கடத்தப்பட்டது எப்படி?
இரு தினங்களுக்கு முன்னர் ஹமாஸின் உயர்மட்ட தலைவர் இஸ்மாயில் ஹனியே, அவர் தங்கியிருந்த தெஹ்ரான் விருந்தினர் மாளிகைக்குள் இரகசியமாக கடத்தப்பட்ட ஒரு வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த தகவலை அதிகாரிகளை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் (NYT) செய்தி வெளியிட்டுள்ளது. அவர் தங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டது எனவும் செய்தி வெளியிட்டுள்ளது. ஹனியே, ஈரானின் தலைநகர் தெஹ்ரானுக்கு, மசூத் பெசெஷ்கியானின் பதவியேற்பு விழாவிற்கு சென்றிருந்தார். அவர் வடக்கு தெஹ்ரானின் உயர்மட்ட சுற்றுப்புறத்தில் இஸ்லாமிய புரட்சிகர காவலர்களால் நடத்தப்படும் விருந்தினர் மாளிகையில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டார். தெஹ்ரான் வருகையின் போது அவர் அடிக்கடி விருந்தினர் மாளிகையில் தங்கியிருப்பது வழக்கம்.
வெடிகுண்டு எங்கே வைக்கப்பட்டது?
ஃபர்ஸ்ட்போஸ்ட் அறிக்கையின் படி, ஹமாஸின் ஆரம்ப அறிக்கை ஹனியே "வான்வழி ஏவுகணையில்" கொல்லப்பட்டதாகக் கூறியது. ஈரானுக்கு வெளியிலிருந்து ட்ரோன் மூலம் மூன்று ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும் ஆரம்பத்தில் ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், சமீபத்திய தகவல்கள் ஹனியே தங்கியிருந்த விருந்தினர் மாளிகைக்குள் ரகசியமாக கடத்தப்பட்ட வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டதாகக் கூறுகின்றன. இரண்டு ஈரானியர்கள் உட்பட ஏழு மேற்கு ஆசிய அதிகாரிகளையும், பெயர் தெரியாத ஒரு அமெரிக்க அதிகாரியையும் மேற்கோள் காட்டிய நியூயார்க் டைம்ஸின் கூற்றுப்படி, வெடிகுண்டு சாதனம் இரண்டு மாதங்களுக்கு முன்பே விருந்தினர் மாளிகையில், ஹனியேவின் படுக்கையறையில் மறைத்து வைக்கப்பட்டது. அவர் விருந்தினர் மாளிகையில் உள்ள அவரது அறைக்குள் இருந்தார் என்பது உறுதிசெய்யப்பட்டவுடன் வெடிகுண்டு வெடிக்கப்பட்டது. அதில் ஹனியேவும், ஒரு மெய்க்காப்பாளரும் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல் இந்த தாக்குதலை பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவில்லை
இந்த கொலைக்கு இஸ்ரேல் பகிரங்கமாக பொறுப்பேற்கவில்லை என்றாலும், இஸ்ரேலிய உளவுத்துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கையின் விவரங்களை அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய அரசாங்கங்களுக்கு விளக்கியதாக NYT தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், படுகொலை சதி பற்றிய முன்கூட்டிய தகவலை பெறவில்லை என்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்தார். வியாழன் அன்று தெஹ்ரானில் ஹனியேவின் பொது இறுதிச் சடங்கு நடைபெற்றது. இதில் திரளான மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி ஹனியேவுக்கு பிரார்த்தனை செய்தார். அவர் கொல்லப்பட்டதற்கு "கடுமையான தண்டனை தரப்படும்" என்று அவர் நேரடியாக எச்சரிக்கை விடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.