பிரான்ஸ் சூப்பர் மார்க்கெட்களில் நடந்த மிகப்பெரிய சைபர் தாக்குதலுக்கு பின்னால் ஈரான் உள்ளதென பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் குற்றச்சாட்டு
செய்தி முன்னோட்டம்
பிரான்ஸில் உள்ள சுமார் 700-க்கும் மேற்பட்ட சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் சில்லறை வணிக நிறுவனங்களை இலக்காகக் கொண்டு கடந்த மாதம் நடத்தப்பட்ட மாபெரும் சைபர் தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருப்பதாக பிரான்ஸ் அரசு அதிகாரப்பூர்வமாக குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தத் தாக்குதலால் சூப்பர் மார்க்கெட்டுகளில் இருந்த புதிய காய்கறிகள், பழங்கள் மற்றும் உறைய வைக்கப்பட்ட உணவுகள் முற்றிலும் அழுகிப் பெரும் சேதமடைந்தன. இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்,"இது முன்னெப்போதும் இல்லாத அளவிலான மற்றும் கடுமையான அக்கிரமமான தாக்குதலாகும். பிரான்ஸ் மண்ணில் சீர்குலைக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட முதல் பெரிய அளவிலான சைபர் தாக்குதல் இதுவே ஆகும். நாட்டின் நலன்கள் மற்றும் பிரெஞ்சு மக்களின் பாதுகாப்பின் மீதான முக்கியமான தாக்குதலாக இது கருதப்படுகிறது."
ஹேக்கர்கள்
ஃப்ரிட்ஜ் வெப்பநிலையை 50°C-க்கு உயர்த்திய ஹேக்கர்கள்
ஹேக்கர்கள் இரவோடு இரவாக சூப்பர் மார்க்கெட்டுகளின் குளிரூட்டும் அமைப்புகளின் சர்வர்களுடன் தொலைதூரத்தில் இருந்து இணைந்து, அவற்றின் வெப்பநிலையை 50 டிகிரி செல்சியஸ் (122°F) வரை உயர்த்தியுள்ளனர்.
இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான டன் எடையுள்ள புதிய உணவுப் பொருட்கள் அழுகி வீணாகின. சில இடங்களில் அதிகப்படியான வெப்பத்தால் குளிரூட்டும் சாதனங்கள் தீப்பற்றி எரிந்தன.
பாரிஸ் அரசு வழக்கறிஞர் அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட தகவலில், தாக்குதலில் ஃபார்சி மொழி பயன்படுத்தப்பட்டிருந்ததும், ஈரானில் உள்ள சாதனங்களின் IP முகவரிகள் கண்டறியப்பட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையுடன் தொடர்புடைய ஷாஹித் காவே என்ற சைபர் பிரிவின் தலைவர்கள் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக பாரிஸில் உள்ள ஈரான் தூதருக்கு பிரான்ஸ் சம்மன் அனுப்பியுள்ளது