"ஹமாஸின் முடிவின் ஆரம்பம்"- போராளிகளை சரணடைய வலியுறுத்தும் இஸ்ரேல் பிரதமர்
ஹமாஸ் போராளிகளை ஆயுதங்களை கைவிடுமாறு வலியுறுத்திய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அந்த அமைப்பு அதன் முடிவை நெருங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். அக்டோபர் 7 ஆம் தேதி, இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே தொடங்கிய போர், இரண்டு மாதங்களை கடந்தும் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், போரில் ஈடுபட்டுள்ள ஹமாஸ் போராளிகளை சரணடைமாறு இஸ்ரேல் பிரதமர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். "போர் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது, ஆனால் அது ஹமாஸின் முடிவின் ஆரம்பம்." "ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு நான் சொல்கிறேன், யஹ்யா சின்வாருக்காக இறக்காதீர்கள். இப்போது சரணடையுங்கள்." என அவர் கூறியிருந்தார்.
இஸ்ரேல் கூறுவதை மறுக்கும் ஹமாஸ்
மேலும், கடந்த சில நாட்களில், டஜன் கணக்கான ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் படைகளிடம் சரணடைந்துள்ளனர் என நெதன்யாகு கூறினார். இருப்பினும் இது தொடர்பான ஆதாரங்களை இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் வெளியிடவில்லை. அதே சமயம், போராளிகள் சரணடைவதாக இஸ்ரேல் கூறியுள்ளதை ஹமாஸ் முழுவதுமாக மறுத்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரான யோசவ் கல்லன்ட், காசா மீதான தனது கட்டுப்பாட்டை ஹமாஸ் இழந்துவிட்டதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக நடைபெறும் கடுமையான போரில், 17,997 பாலஸ்தீனர்களும், 1,200 இஸ்ரேலிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 240 பேர், பணய கைதிகளாக ஹமாசால் பிடித்துச் சொல்லப்பட்டனர்.
பணய கைதிகள் கொல்லப்படுபவர் என ஹமாஸ் எச்சரிக்கை
காசா பகுதிக்கு மனிதாபிமான உதவிகளை அதிகரிப்பது, பாலஸ்தீன சிறை கைதிகளின் விடுதலை உள்ளிட்ட கோரிக்கைகளை, இஸ்ரேல் நிறைவேற்றாத பட்சத்தில், பணய கைதிகள் கொல்லப்படுவார்கள் என ஹமாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் ஆயுதப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபேடா, "பாசிச எதிரியும் அதன் திமிர்பிடித்த தலைமையும்... அல்லது அதன் ஆதரவாளர்களும்...பேச்சுவார்த்தை கோரிக்கைகளை நிறைவேற்றாமல், பணய கைதிகளை உயிருடன் மீட்க முடியாது" என தெரிவித்தார். ஹமாஸ் பிடித்துச் சென்ற பணய கைதிகளில் இறந்து போன 20 நபர்களின் உடல்கள அந்த அமைப்பு வைத்துள்ளதாக, இஸ்ரேல் குற்றம் சாட்டியிருந்த நிலையில், அபு ஒபேடா இவ்வாறு தெரிவித்துள்ளார். காசாவில் இன்னும், 137 பணய கைதிகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
காசாவின் தெற்கு பகுதியில் தாக்குதலை தீவிரப்படுத்தும் இஸ்ரேல்
காசாவின் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி தரைவழி தாக்குதலை தீவிர படுத்தியுள்ள இஸ்ரேல், மக்களை கான் யூனிஸ் நகரத்தின் மையப்பகுதிக்கு வெளியேற உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் ஹமாஸ் இடையே அறிவிக்கப்பட்ட ஏழு நாட்கள் போர் நிறுத்தம், கடந்த ஒன்றாம் தேதி முடிவுக்கு வந்த நிலையில், மேலும் போர் நிறுத்தம் அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவான கத்தார் தெரிவித்துள்ளது. போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் முக்கிய மத்தியஸ்தராக இருந்த கத்தாரின் பிரதமர், "ஒரு புதிய போர்நிறுத்தத்தைப் பெறுவதற்கு ஒரு "குறுகலான" சாளரம் மட்டுமே இருப்பதாக" கூறினார்.