Sports Round Up : சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமனம்; தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி வெற்றி; மேலும் பல முக்கிய செய்திகள்
செய்தி முன்னோட்டம்
வியாழக்கிழமை (அக்டோபர் 12) நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் 134 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
முன்னதாக, போட்டியில் டாஸ் வென்று ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்த நிலையில், தென்னாப்பிரிக்கா 50 ஓவர்களில் 311 ரன்கள் குவித்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டி காக் 109 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஷ் மற்றும் கிளென் மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது.
தென்னாப்பிரிக்க அணியில் சிறப்பாக பந்துவீசிய காகிஸோ ரபாடா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
Russia suspended by International Olympic Committee
சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பிலிருந்து ரஷ்யா இடைநீக்கம்
உக்ரைன்-ரஷ்யா இடையே தொடர்ந்து போர் நீடித்து வரும் நிலையில், ரஷ்ய ஒலிம்பிக் சங்கம் அந்நாடு கைப்பற்றிய உக்ரைன் பகுதிகளை சேர்ந்த விளையாட்டு அமைப்புகள் மற்றும் வீரர்களை தன்னுடன் இணைத்துக் கொண்டது.
இது உக்ரைனின் இறையாண்மையை மீறும் ஒலிம்பிக் சாசன விதி மீறல் என தெரிவித்துள்ள சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, இதற்காக ரஷ்யாவை இடைநீக்கம் செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
உடனடியாக இந்த உத்தரவு அமலுக்கு வரும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்திருந்தாலும், ரஷ்ய வீரர்கள் நாடற்ற வீரர்களாக 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க எந்த தடையும் தற்போது விதிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை மும்பையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டம் நடைபெறும் நிலையில், அதற்கு ஒருநாள் முன்னதாக இந்த உத்தரவு வந்துள்ளது.
Sanju Samson named as Captain for kerala in Syed Ali Mushtaq Trophy
சையத் முஷ்டாக் அலி டிராபியில் கேரள அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமனம்
இந்திய கிரிக்கெட் அணி வீரர் சஞ்சு சாம்சன் அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கும் சையத் முஷ்டாக் அலி டிராபியில் கேரள அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கும் இந்த தொடர் நவம்பர் 6 வரை நடைபெற உள்ளது. மேலும், இந்த தொடர் டி2ஓ கிரிக்கெட் வடிவில் நடைபெற உள்ளது.
சஞ்சு சாம்சனுக்கு திறமை இருந்தும் இந்திய அணியில் முறையான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டாலும், சையத் முஷ்டாக் அலி டிராபியில் மீண்டும் தனது திறமையை நிரூபித்து தேர்வுக்குழுவின் கவனத்தை ஈர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, கேரள அணியின் தலைமை பயிற்சியாளராக தமிழக முன்னாள் வீரர் எம். வெங்கடரமணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
BCCI to have Music fest before INDvsPAK ODI WC 2023
இந்தியா vs பாகிஸ்தான் போட்டிக்கு முன்னதாக இசை நிகழ்ச்சி; பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டியை உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகரும் மறக்க முடியாத ஒன்றாக மாற்ற பிசிசிஐ சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
சனிக்கிழமையன்று (அக்டோபர் 14) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதவுள்ள நிலையில், போட்டிக்கு முன்பு இந்தியாவின் மிகப் பெரிய பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்களான அரிஜித் சிங், ஷங்கர் மகாதேவன் மற்றும் சுக்விந்தர் சிங் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஒருநாள் உலகக்கோப்பையின் தொடக்க விழாவை பிசிசிஐ நடத்தாத நிலையில், இது அதை ஈடுகட்டும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Merdeka Cup Indian football team faces malaysia today
மெர்டேகா கோப்பை : மலேசியாவுடன் இந்திய கால்பந்து அணி இன்று மோதல்
மினி ஆசிய கோப்பை என வர்ணிக்கப்படும் மெர்டேகா கோப்பை கால்பந்து போட்டிகள் இன்று மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் தொடங்குகிறது.
இதில் முதல் போட்டியில் இந்திய அணி மலேசியாவை எதிர்கொள்கிறது. முன்னதாக, 10 அணிகள் பங்கேற்கும் போட்டியாக நடத்தப்படும் இது, இந்த ஆண்டு இந்தியா, மலேசியா, பாலஸ்தீனம் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் பங்கேற்கும் போட்டியாக குறைக்கப்பட்டது.
எனினும் இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே தற்போது நிலவும் பிரச்சினையால், பாலஸ்தீனம் கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து விலகியது.
இதனால், தஜிகிஸ்தான் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெல்லும் அணி இறுதிப்போட்டியில் தஜிகிஸ்தானை எதிர்கொள்ளும்.