அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு இந்தியா வரி விதிக்காது என டிரம்ப் அறிவித்தார்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக அறிவித்துள்ளார். இதன்படி, இந்தியப் பொருட்களுக்கான அமெரிக்காவின் இறக்குமதி வரி 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்படும். பதிலுக்கு, அமெரிக்கப் பொருட்கள் மீதான வரிகள் மற்றும் கட்டுப்பாடுகளை இந்தியா முற்றிலுமாக நீக்க ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மிக முக்கியமான அம்சமாக, ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டு, அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடமிருந்து அதிகப்படியான கச்சா எண்ணெயை வாங்க இந்தியா சம்மதித்துள்ளது. இதன் மூலம், உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதற்குக் கைமாறாக, இந்தியா மீது விதிக்கப்பட்டிருந்த 25 சதவீத கூடுதல் வரியை அமெரிக்கா உடனடியாக நீக்கியுள்ளது.
முதலீடு
500 பில்லியன் டாலர் முதலீடு
எரிசக்தி, தொழில்நுட்பம், நிலக்கரி மற்றும் விவசாயப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமெரிக்காவிடமிருந்து சுமார் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை கொள்முதல் செய்யப் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளதாக டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) பதிவில் குறிப்பிட்டுள்ளார். அறிவிப்புகள் இருந்தபோதிலும், ஒப்பந்தத்தின் பல அம்சங்கள் தெளிவாக இல்லை. டிரம்ப்பின் பதிவில் வர்த்தக தடைகள் எவ்வாறு குறைக்கப்படும் அல்லது எந்த அமெரிக்க தயாரிப்புகளை இந்தியா வாங்க உறுதிபூண்டுள்ளது என்பது குறிப்பிடப்படவில்லை. இரு தரப்பிலும் உள்ள அதிகாரிகள் இன்னும் ஒப்பந்தத்தின் விரிவான கட்டமைப்பை வெளியிடவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் வந்துள்ளது.