Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
செய்தி முன்னோட்டம்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரில் புதன்கிழமை (நவம்பர் 15) நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து 397 ரன்கள் குவித்தது.
இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் சதமடித்தனர்.
தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் டேரில் மிட்செல் சிறப்பாக ஆடி சதமடித்தாலும், மற்ற வீரர்கள் சொதப்பியதால் 327 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வியைத் தழுவியது.
இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். விரிவாக படிக்க
Srilanka cricket board files defamation case against minister
விளையாட்டுத் துறை அமைச்சருக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் வாரியம் அவதூறு வழக்கு
இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக அவதூறு அறிக்கைகளை வெளியிட்டதற்காக அந்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக, இலங்கை கிரிக்கெட் வாரியம் அவதூறு வழக்கு ஒன்றை புதன்கிழமை தொடர்ந்துள்ளது.
முன்னதாக, ஒருநாள் உலகக்கோப்பையில் படுதோல்வி அடைந்ததோடு, 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது.
இதையடுத்து இலங்கை கிரிக்கெட் வாரியம் ஊழலில் திளைப்பதாக குற்றம் சாட்டி இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் பேசியதோடு, கிரிக்கெட் வாரியத்தை முழுமையாக கலைத்தார்.
இதற்கு நீதிமன்றம் தடை விதித்தாலும், இந்த விவகாரத்தால் அரசு மற்றும் கிரிக்கெட் வாரியத்திற்கு இடையே மோதல் போக்கு தீவிரமடைந்துள்ளது.
Rohan Bopanna becomes oldest player to secure victory in ATP Finals
ஏடிபி பைனலில் வெற்றி பெற்ற வயதான வீரர் என்ற சாதனை படைத்த ரோஹன் போபண்ணா
ஏடிபி பைனல் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் ரோஹன் போபண்ணா இரட்டையர் பிரிவில் ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டனுடன் இணைந்து முதல் வெற்றியை பெற்றார்.
புதன்கிழமை நடந்த இந்த போட்டியில், ரிங்கி ஹிஜிகாட்டா மற்றும் ஜேசன் குப்லரை எதிர்கொண்ட இந்த ஜோடி 6-4 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.
போபண்ணாவும் மேத்யூ எப்டனும் இப்போது தங்கள் குழுவில் 1-1 என்ற கணக்கில் உள்ளனர்.
மேலும் வெள்ளிக்கிழமை வெஸ்லி கூல்ஹோஃப் மற்றும் நீல் ஸ்குப்ஸ்கிக்கு எதிரான போட்டியின் முடிவைப் பொறுத்து அரையிறுதிக்கு தகுதி பெறலாம்.
இதற்கிடையே, இந்த வெற்றியின் மூலம் ஏடிபி பைனல் போட்டியில் ஒரு வெற்றியை பெறும் வயதான வீரர் என்ற சாதனையை 43 வயதான போபண்ணா படைத்துள்ளார்.
Pakitan cricket board names Shan Masood and Shaheen Afridi for Test and T20I captain
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன்களாக ஷான் மசூத் மற்றும் ஷாஹீன் அப்ரிடி நியமனம்
பாபர் அசாம் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, ஷான் மசூத் மற்றும் ஷாஹீன் அப்ரிடி முறையே டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டனர்.
பாகிஸ்தான் அணிக்கு விரைவில் ஒருநாள் போட்டிகள் எதுவும் திட்டமிடப்படாத நிலையில், இந்த வடிவத்திற்கான கேப்டனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது நியமிக்கவில்லை.
முன்னதாக, ஒருநாள் உலகக்கோப்பையில் பெற்ற படுதோல்விக்கு பிறகு கடும் விமர்சனங்களை எதிர்கொண்ட பாபர் அசாம், புதன்கிழமை கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார்.
இதையடுத்து புதிய கேப்டனாக ஷதாப் கான் அல்லது ஷாஹீன் அப்ரிடி நியமிக்கப்படுவார் என தகவல் கசிந்த நிலையில், வெவ்வேறு வடிவ கிரிக்கெட்டுக்கு தனித்தனி கேப்டன்களை நியமித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
Virat Kohli becomes most odi centurion
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதமடித்து விராட் கோலி சாதனை
புதன்கிழமை நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை 2023 அரையிறுதி போட்டியில் விராட் கோலி சதமடித்தார்.
113 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர்கள் உட்பட 117 ரன்களை குவித்த விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தனது 50வது சதத்தை பதிவு செய்தார்.
இதன் மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதமடித்த சாதனையை தக்கவைத்திருந்த ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்துள்ளார்.
மேலும், இந்த சதம் மூலம், ஒருநாள் உலகக்கோப்பையில் தனது ஐந்தாவது சதத்தையும் பதிவு செய்துள்ளார்.