INDvsNZ Semifinal : 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி; இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா
ஒருநாள் உலகக்கோப்பை 2023 தொடரின் முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. முன்னதாக, மும்பை வான்கடே மைதானத்தில் புதன்கிழமை (நவ.15) நடைபெற்ற போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் விராட் கோலி (117), ஷ்ரேயாஸ் ஐயர் (105) மற்றும் ஷுப்மன் கில் (80) ஆகியோரின் அபார பேட்டிங்கால் 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் சதமடித்ததன் மூலம் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 50வது சதத்தை பதிவு செய்து அதிக சதமடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். இதற்கிடையே, நியூசிலாந்து அணியில் சிறப்பாக பந்துவீசிய டிம் சவுத்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முகமது ஷமி அபார பந்துவீச்சு
398 ரன்கள் எனும் கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சொற்ப ரன்களில் வெளியேறினாலும், கேன் வில்லியம்சன் மற்றும் டேரில் மிட்செல் ஜோடி சேர்ந்து அணியை மீட்டனர். இதில் கேன் வில்லியம்சன் 69 ரன்களில் அவுட்டாகி வெளியேறினாலும், டேரில் மிட்செல் சதமடித்து 134 ரன்கள் குவித்தார். அதன் பின் வந்தவர்களில் கிளென் பிலிப்ஸ் மட்டும் 41 ரன்கள் எடுத்த நிலையில், மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ரன்களை எடுத்து அவுட்டாக, இறுதியில் 48.2 ஓவர்களில் 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் அபாரமாக பந்துவீசிய முகமது ஷமி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.