LOADING...
அமெரிக்காவின் திடீர் யூ-டர்ன்: ஈரான் கச்சா எண்ணெய் சந்தைக்கு வர அனுமதி; பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படுமா?
ஈரான் எண்ணெய் மீதான தடையை தற்காலிகமாக நீக்கியது அமெரிக்கா

அமெரிக்காவின் திடீர் யூ-டர்ன்: ஈரான் கச்சா எண்ணெய் சந்தைக்கு வர அனுமதி; பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படுமா?

எழுதியவர் Sekar Chinnappan
Mar 21, 2026
08:12 am

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு நாடுகளில் நீடித்து வரும் போர்ச் சூழலால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனைத் தணிக்கவும், எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சரிசெய்யவும், ஈரான் நாட்டின் கச்சா எண்ணெய் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா தற்காலிகமாக நீக்கியுள்ளது. அமெரிக்க நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த அதிரடி அறிவிப்பு, சர்வதேச எரிபொருள் சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காரணம்

அமெரிக்காவின் இந்த முடிவிற்கு என்ன காரணம்?

ஈரான் உடனான மோதல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் 20 சதவீத எண்ணெய் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 120 டாலரை நெருங்கியது. தற்போது கடலில் கப்பல்களில் தேங்கியுள்ள சுமார் 140 மில்லியன் பேரல் ஈரான் கச்சா எண்ணெயைச் சர்வதேச சந்தைக்குக் கொண்டு வருவதன் மூலம் விலையைக் குறைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதுவரை ஈரான் எண்ணெயைச் சீனா மட்டுமே மலிவு விலையில் ரகசியமாக வாங்கி வந்தது. தற்போது இந்தத் தடையை நீக்குவதன் மூலம், உலக நாடுகள் அனைத்தும் இந்த எண்ணெயைப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நிபந்தனைகள்

தடையின் காலக்கெடு மற்றும் நிபந்தனைகள்

அமெரிக்காவின் இந்தத் தளர்வு சில குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டது. மார்ச் 20 ஆம் தேதிக்கு முன்பாகக் கப்பல்களில் ஏற்றப்பட்ட ஈரான் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை விற்கவும், விநியோகம் செய்யவும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி வரும் ஏப்ரல் 19, 2026 வரை மட்டுமே அமலில் இருக்கும். கியூபா, வடகொரியா மற்றும் ரஷ்யா ஆக்கிரமித்துள்ள உக்ரைன் பகுதிகளுக்கு இந்த எண்ணெயை விநியோகிக்கக் கூடாது என அமெரிக்கா திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

Advertisement

ஈரான் மறுப்பு

உபரி எண்ணெய் இல்லை என ஈரான் மறுப்பு

அமெரிக்காவின் இந்த அறிவிப்பை ஈரான் கடுமையாகச் சாடியுள்ளது. இது குறித்து ஈரான் எண்ணெய் அமைச்சக செய்தித் தொடர்பாளர் சமன் கோடூசி கூறுகையில், "ஈரானிடம் சர்வதேச சந்தைக்கு வழங்க தற்போதைக்கு உபரி எண்ணெய் எதுவும் இல்லை. வாங்குபவர்களுக்கு வீண் நம்பிக்கை அளிக்கவே அமெரிக்கா இத்தகைய அறிக்கைகளை வெளியிடுகிறது." எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement

சந்தை நிலவரம்

தற்போதைய விலை என்ன?

அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வெளியான பின்னரும், வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் எண்ணெய் விலை உயர்வுடனேயே முடிவடைந்தது. பிரெண்ட் கச்சா எண்ணெய் 3.26% உயர்ந்து பீப்பாய்க்கு $112.19 ஆக உள்ளது. வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் 2.27% உயர்ந்து பீப்பாய்க்கு $98.32 ஆக உள்ளது. இருப்பினும், 120 டாலர் என்ற உச்சத்தை எட்டாமல் விலை ஓரளவு கட்டுக்குள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement