Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
இந்தியா vs இங்கிலாந்து இடையே புதன்கிழமை (டிசம்பர் 7) நடைபெற்ற மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. மும்பை வான்கடே மைதானத்தை நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது. டேனியல் வியாட் 75 ரன்களும், நாட் சிவர்-ப்ராண்ட் 77 ரன்களும் குவித்தனர். இந்திய தரப்பில் ரேணுகா சிங் 3 விக்கெட்டுக்களி வீழ்த்தினார். தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. ஷெபாலி வர்மா அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்தார்.
டிசம்பர் 8இல் தொடங்குகிறது யு19 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி
ஆசிய கோப்பை யு19 கிரிக்கெட் தொடர் டிசம்பர் 8 முதல் துபாயில் தொடங்க உள்ளது. டிசம்பர் 8 முதல் 17 வரை போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்தியா ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. மேலும், டிசம்பர் 8இல் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் மோதுகின்றன. இதற்கிடையே, அதிக எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றான இந்தியா vs பாகிஸ்தான் போட்டி டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாளம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜப்பான் ஆகிய அணிகள் போட்டியிடுகின்றன. விரிவாக படிக்க
மகளிர் ஐபிஎல் 2024 சீசன் பிப்ரவரியில் நடக்கும் என அறிவிப்பு
மகளிர் ஐபிஎல் இரண்டாவது சீசன் 2024 பிப்ரவரியில் நடத்தப்படும் என ஐபிஎல் ஆட்சிமன்ற குழு தலைவர் அருண் துமால் அறிவித்துள்ளார். முன்னதாக, மகளிர் ஐபிஎல்லுக்கான ஏலம் டிசம்பர் 9 ஆம் தேதி மும்பையில் நடைபெற உள்ள நிலையில், அருண் துமால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மகளிர் ஐபிஎல் 2024 சீசனை ஒரே நகரத்தில் மட்டும் நடத்தலாமா அல்லது ஆடவர் ஐபிஎல்லை போல பல்வேறு நகரங்களில் நடத்தலாமா என்பது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருவதாகவும், ஏலத்திற்காக நடக்க உள்ள ஆலோசனை கூட்டத்தின்போது இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்றார். விரிவாக படிக்க
ஐசிசி டி20 பந்துவீச்சு தரவரிசையில் ரவி பிஷ்னோய் முதலிடம்
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் ஐசிசி டி20 பந்துவீச்சு தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். முன்னதாக, கடந்த வாரம் ஐந்தாவது இடத்தில் இருந்த அவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டு 34 புள்ளிகளை கூடுதலாக பெற்றார். இதன் மூலம், முதலிடத்தில் இருந்த ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கானை பின்னுக்குத் தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். பிஷ்னோய் தற்போது ரஷீத் கானை விட 7 புள்ளிகள் கூடுதலாக கொண்டுள்ளார். இதற்கிடையே, பேட்டிங் தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளார். விரிவாக படிக்க
புரோ கபடி லீக் : உபி யோதாஸ் மற்றும் பாடினா பைரேட்ஸ் அணிகள் வெற்றி
புரோ கபடி லீக் பத்தாவது சீசனில் புதன்கிழமை நடைபெற்ற இரண்டு வெவ்வேறு ஆட்டங்களில் உபி யோதாஸ் மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணிகள் வெற்றி பெற்றன. முன்னதாக, அகமதாபாத்தில் உள்ள இகேஏ அரங்கில் நடைபெற்ற இந்த போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை எதிர்கொண்ட உபி யோதாஸ் அபாரமாக விளையாடி 57-27 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. உபி அணியின் சுரேந்தர் கில் 13 ரெய்டு புள்ளிகளையும், சுமித் 8 டேக்கிள் புள்ளிகளையும் பெற்றார். இதற்கிடையே, மற்றொரு ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்ட பாட்னா பைரேட்ஸ் அணியும் 50-28 என்ற புள்ளிக்கணக்கில் அபார வெற்றி பெற்றது. பாட்னா அணியின் சச்சின் 14 ரெய்டு புள்ளிகளை எடுத்தார்.