ஐசிசி டி20 பந்துவீச்சு தரவரிசையில் முதலிடம் பிடித்தார் ரவி பிஷ்னோய்
இந்திய கிரிக்கெட் அணியின் லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய், சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் அபாரமாக விளையாடியதன் மூலம் பந்துவீச்சு தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் ஐசிசி டி20 பந்துவீச்சு தரவரிசையில் ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு பிறகு முதலிடம் பிடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை ரவி பிஷ்னோய் படைத்துள்ளார். முன்னதாக, கடந்த வாரம் 5வது இடத்தில் இருந்த ரவி பிஷ்னோய் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான செயல்திறன் மூலம் முதலிடத்தில் இருந்த ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கானை பின்னுக்குத் தள்ளியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் 5 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ரவி பிஷ்னோய், 2024 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தனது இடத்தை வலுவாக உறுதி செய்துள்ளார்.
பேட்டிங் தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் முதலிடம்
ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தை தக்கவைத்துள்ள நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் தனது 7வது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டனர். சமீபத்தில் முடிவடைந்த டி20 தொடரில் கெய்க்வாட் 5 போட்டிகளில் 223 ரன்கள் எடுத்தார். கவுகாத்தியில் நடந்த 3வது டி20 போட்டியில் அவர் சதம் அடித்தார். ஆனால் கிளென் மேக்ஸ்வெல்லின் அபார ஆட்டத்தால் அது வீணாக முடிந்தது. இதற்கிடையே, 2023இல் 11 டி20 போட்டிகளில் இந்தியாவை வழிநடத்திய ஹர்திக் பாண்டியா, ஐசிசி டி20 ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் 3வது இடத்தில் நீடிக்கிறார். 2023 உலகக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் கணுக்கால் காயம் காரணமாக அவர் விளையாடவில்லை.