பிப்ரவரி 2024இல் மகளிர் ஐபிஎல் தொடர்; ஐபிஎல் ஆட்சிமன்ற குழு தலைவர் அருண் துமால் அறிவிப்பு
மகளிர் ஐபிஎல்லின் இரண்டாவது சீசன் 2024 பிப்ரவரியில் நடைபெறும் என ஐபிஎல் ஆட்சிமன்ற குழுவின் தலைவர் அருண் துமால் தெரிவித்துள்ளார். மேலும், தொடக்கப் பதிப்பில் நடந்ததைப் போல, போட்டியை ஒரே நகரத்தில் நடத்தலாமா அல்லது ஆடவர் ஐபிஎல் போல பல நகரங்களில் நடத்தலாமா என்பது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) விரைவில் முடிவு செய்யும் என அறிவித்துள்ளார். வரும் சனிக்கிழமை (டிசம்பர் 9) மகளிர் ஐபிஎல் ஏலத்தையொட்டி மும்பையில் அலுவலகப் பணியாளர்கள் சந்திக்கும் போது இடம் குறித்து விவாதம் நடைபெறும் என்று அருண் துமால் ஸ்போர்ட்ஸ்டாரிடம் கூறினார்.
மும்பை மற்றும் பெங்களூரில் போட்டி நடக்க வாய்ப்பு
மும்பை மற்றும் பெங்களூரில் மகளிர் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படலாம் என்று கிரிக்கெட் வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிபடுகிறது. இந்த இரண்டு இரண்டு நகரங்களிலும் மகளிர் கிரிக்கெட்டுக்கு வலுவான ரசிகர்கள் உள்ளனர். கடந்த சீசனில், மும்பையில் போட்டிகள் நடைபெற்றபோது, ரசிகர்கள் அதிக அளவில் குவிந்தனர். மும்பை இந்தியன்ஸ் அல்லது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஒரு ஆட்டத்தில் இடம்பெறும் போதெல்லாம், மைதானம் முழுமையாக நிரம்பியது குறிப்பிடத்தக்கது. எனினும், அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு ஒரு முடிவு எடுக்கப்படும் என்று அருண் துமால் கூறினார். பல நகர வடிவில் போட்டியை நடத்த முடிந்தால், ரசிகர்கள் மற்றும் அணி உரிமையாளர்களுக்கு ரசிகர் பட்டாளம் இருப்பதால் அது சிறப்பாக இருக்கும்.