Sports Round Up : இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்
பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் முதல் பெண் நடுவர் என்ற பெருமையை ரெபேக்கா வெல்ச் பெற்றுள்ளார். இங்கிலாந்தின் கிளப் மட்டத்திலான கால்பந்து தொடரான பிரீமியர் லீக்கில், சனிக்கிழமையன்று ஃபுல்ஹாம் மற்றும் பர்ன்லி இடையேயான போட்டியில் ரெபேக்கா வெல்ச் நடுவராக செயல்பட்டார். க்ராவன் காட்டேஜில் நடந்த இந்த போட்டிக்கு முன்னதாக, அவர் மைதானத்தில் நுழைந்தபோது ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். வெல்ச் ஏற்கனவே நவம்பர் 4 அன்று ஃபுல்ஹாம் மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் இடையேயான போட்டிக்கான பிரீமியர் லீக்கில் நான்காவது அதிகாரியாக பணிபுரிந்துள்ளார். அவர் இரண்டாம் அடுக்கு சாம்பியன்ஷிப் மற்றும் எப்ஏ கோப்பை போட்டிகளையும் கையாண்டுள்ளார். எனினும், முழுநேர போட்டியின் கள நடுவராக பணியாற்றுவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானில்தான் போட்டி; இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்த சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ள டேவிஸ் கோப்பை உலக குரூப் 1 ப்ளே-ஆஃப் போட்டியை வேறு நாட்டுக்கு மாற்றும் இந்தியாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் 60 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய டென்னிஸ் அணி பாகிஸ்தான் சென்று விளையாட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக, 2019ஆம் ஆண்டிலும், இந்தியா vs பாகிஸ்தான் மோதல் அந்நாட்டில் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இந்தியாவின் கோரிக்கையின் பேரில் போட்டி கஜகஸ்தானிற்கு மாற்றப்பட்டது. ஆனால், இந்த முறை போட்டியை எக்காரணம் கொண்டும் வேறு நாட்டிற்கு மாற்ற முடியாது என சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு அறிவித்துவிட்டது. இதனால், இந்தியா போட்டியை புறக்கணித்தால் டேவிஸ் கோப்பை உலக குரூப் 2 ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கலை எதிர்கொள்ளும்.
இந்திய யு19 மகளிர் கால்பந்து அணியின் பயிற்சியாளராக சுக்லா தத்தா நியமனம்
இந்திய கால்பந்து கூட்டமைப்பு இந்திய யு19 மகளிர் கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக சுக்லா தத்தாவை சனிக்கிழமை (டிசம்பர் 24) நியமித்தது. முன்னாள் இந்திய சர்வதேச புகழ்பெற்ற வீரரான சுக்லா தத்தா, இதற்கு முன்பு இந்திய யு17 மகளிர் அணிக்கு பயிற்சியாளராக இருந்துள்ளார் மற்றும் ரைசிங் ஸ்டூடன்ட் கிளப்பை 2017-18 இந்திய மகளிர் லீக் பட்டத்திற்கு அழைத்துச் சென்றார். இந்த குழு இந்திய அணியின் முன்னாள் வீராங்கனையான ஸ்ரதாஞ்சலி சமந்தரேயை உதவி பயிற்சியாளராகவும், லூரம்பம் ரோனிபாலா சானுவை கோல்கீப்பர் பயிற்சியாளராகவும் நியமித்தது. வரவிருக்கும் யு19 மகளிர் எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப்பிற்கான தயாரிப்புக்காக இந்திய அணி ஜனவரி முதல் வாரத்தில் கோவாவில் தங்கள் பயிற்சி முகாமைத் தொடங்க உள்ளது.
வலைப்பயிற்சியை தொடங்கும் எம்எஸ் தோனி; அப்டேட் கொடுத்த சிஎஸ்கே சிஇஓ
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி 2024 ஐபிஎல் போட்டிக்கான தயாரிப்பின் ஒரு பகுதியாக அடுத்த சில வாரங்களில் மீண்டும் பயிற்சியைத் தொடங்க உள்ளார் என்று அணியின் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐந்தாவது ஐபிஎல் பட்டத்தை வென்று கொடுத்த பின்னர், எம்எஸ் தோனி தனது இடது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்நிலையில், தோனியின் உடற்தகுதி குறித்த அப்டேட்டை அளித்த விஸ்வநாதன், "அவர் இப்போது நன்றாக இருக்கிறார். அவர் தனது உடற்தகுதியை சிறப்பாக வைத்திருக்க ஜிம்மில் பயிற்சி செய்கிறார். மேலும், இன்னும் பத்து நாட்களில், வலைப் பயிற்சியைத் தொடங்குவார்." என்றார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட் நீக்கம்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் நீக்கப்பட்டு அபிமன்யு ஈஸ்வரன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முன்னதாக, கியூபெர்ஹாவில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது ருதுராஜ் கெய்க்வாட்டின் கை விரலில் காயம் ஏற்பட்டது. இதை பரிசோதனை செய்த அணியின் மருத்துவ நிபுணர்கள் குழு, அவரை எஞ்சிய போட்டியில் இருந்து விலக்கி, பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு உரிய சிகிச்சை பெற அனுப்பி வைத்தது. இதனால் அவர் டிசம்பர் 26 அன்று தொடங்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.