Page Loader
Sports Round Up : தினேஷ் கார்த்திக் தமிழக அணியின் கேப்டனாக நியமனம்; மேலும் பல முக்கிய செய்திகள்
இன்றைய முக்கிய விளையாட்டுச் செய்திகள்

Sports Round Up : தினேஷ் கார்த்திக் தமிழக அணியின் கேப்டனாக நியமனம்; மேலும் பல முக்கிய செய்திகள்

எழுதியவர் Sekar Chinnappan
Nov 10, 2023
08:45 am

செய்தி முன்னோட்டம்

ஒருநாள் உலகக்கோப்பை லீக் சுற்றில் வியாழக்கிழமை (நவம்பர் 9) தனது கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையை வீழ்த்தியது. முன்னதாக, பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 171 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக குஷால் பெரேரா 51 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து பேட்டர்கள் 24 ஓவர்களுக்குள் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை தக்கவைத்துள்ள நியூசிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது.

Srilanka parliament passes resolution to dissolve SLC

இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

வியாழக்கிழமை இலங்கை நாடாளுமன்றம் அந்நாட்டு கிரிக்கெட் வாரிய நிர்வாக குழுவை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றியது. இந்த தீர்மானத்திற்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் கூட்டாக ஆதரவளித்தன. பிரதான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, 'ஊழல் மிகுந்த இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தை அகற்றுதல்' என்ற தலைப்பில் தீர்மானத்தை முன்வைத்தார். ஆளும் கட்சியின் மூத்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதை வழிமொழிந்தார். இதையடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, ஒருநாள் உலகக்கோப்பையில் படுதோல்வி அடைந்த பிறகு நிர்வாக குழுவை கலைத்த அரசின் உத்தரவுக்கு நீதிமன்றம் தடைவிதித்த நிலையில், அதற்கு பதிலடியாக தற்போது பாராளுமன்றம் மூலம் மீண்டும் கலைக்கப்பட்டுள்ளது.

Pakistan Cricket Board approves Inzamam-ul-haq resignation

இன்சமாம்-உல்-ஹக்கின் ராஜினாமாவை ஏற்றது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) மற்றும் தலைமை தேர்வாளர் இன்சமாம்-உல்-ஹக் இடையேயான விரிசல் தீவிரமடைந்துள்ள நிலையில், அவரின் தேர்வுக்குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை ஏற்றுக் கொண்டது. இந்தியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் உலகக்கோப்பையில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அரையிறுதிப் போட்டிக்காக போராடி வரும் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வியாழக்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் இன்சமாமின் ராஜினாமை ஏற்றுக்கொண்டதோடு, விரைவில் புதிய தேர்வுக்கு தலைவர் அறிவிக்கப்படுவார் எனத் தெரிவித்துள்ளது. இன்சமாம் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டபோதிலும், அவர் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க ஐந்து பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Dinesh Karthik to lead Tamilnadu in VIjay Hazare Trophy

விஜய் ஹசாரே டிராபியில் தமிழக அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமனம்

நவம்பர் 25 முதல் டிசம்பர் 5 வரை மும்பையில் நடைபெறும் விஜய் ஹசாரே டிராபி ஒரு நாள் போட்டிக்கான தமிழக அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கேப்டனை மட்டும் அறிவித்துள்ள நிலையில், போட்டிக்கான அணி வெள்ளிக்கிழமை முடிவு செய்யப்பட உள்ளது. முன்னதாக, கடந்த மாதம் டேராடூனில் நடந்த சையத் முஷ்டாக் அலி டிராபியில் வாஷிங்டன் சுந்தர் தமிழக அணிக்கு தலைமை தாங்கினார். ஆனால், அவர் ஒருநாள் உலகக்கோப்பை முடிந்த பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான தேசிய அணியில் இடம்பெற வாய்ப்புள்ளதால், தினேஷ் கார்த்திக் மீண்டும் கொண்டவரப்பட்டுள்ளார்.

Maharashtra becomes overall champion in Nationsal Games

தேசிய விளையாட்டுப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது மகாராஷ்டிரா

1994க்குப் பிறகு தேசிய விளையாட்டுப் போட்டியில் முதல் முறையாக ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பிற்கான ராஜா பாலிந்திர சிங் ரோலிங் டிராபியை மகாராஷ்டிரா வென்றுள்ளது. கோவாவில் நடந்த 37வது தேசிய விளையாட்டுப் போட்டியின் இறுதி நாளில் பதக்க பட்டியலில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிரா, யோகாசனத்தில் மூன்று தங்கப் பதக்கங்களையும், துப்பாக்கிச் சுடுதலில் ஒரு தங்கப் பதக்கத்தையும் வென்றது. இதன் மூலம் மகாராஷ்டிரா 80 தங்கம், 69 வெள்ளி மற்றும் 79 வெண்கலப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 228 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. சர்வீசஸ் ]66 தங்கம், 27 வெள்ளி மற்றும் 33 வெண்கலப் பதக்கங்களை பெற்று இரண்டாவது இடத்தையும், ஹரியானா 62 தங்கம், 54 வெள்ளி மற்றும் 73 வெண்கலத்துடன் தரவரிசையில் மூன்றாவது இடத்தையும் பிடித்தது.