அகமதாபாத் செல்லும் ஷுப்மன் கில்; பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பங்கேற்பாரா?
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஷுப்மன் கில் சிகிச்சை மற்றும் குணமடைவதற்காக சென்னையில் தங்கியிருந்த நிலையில், இன்று (அக்.11) அகமதாபாத் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ வட்டாரங்களில் கூறுகையில், ஷுப்மன் கில் சென்னையில் இருந்து அகமதாபாத்திற்கு வணிக விமானத்தில் பயணம் செய்கிறார் என்றும், அங்கு பிசிசிஐ மருத்துவக் குழுவின் கண்காணிப்பின் கீழ் அவர் குணமடைந்து ஓய்வெடுப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கில் தனது ரத்தத்தில் பிளேட்லெட்டுகள் குறைந்ததால் சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் ஒரே நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு ஹோட்டலில் தொடர்ந்து சிகிச்சை பெற்றார். அக்டோபர் 10 ஆம் தேதி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கில் பங்கேற்பாரா?
சென்னையில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் ஷுப்மன் கில் இடம்பெறவில்லை. மேலும், இன்று டெல்லியில் நடக்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் இடம் பெறாத நிலையில், அடுத்து நடக்க உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவரை களமிறக்க இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காகவே அவர் அகமதாபாத்திற்கு முன்கூட்டியே அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், அவர் அணியில் இடம்பெறுவது உடல்நிலை முன்னேற்றத்தைப் பொறுத்தே இருக்கும் எனத் தெரிகிறது. ஷுப்மன் கில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு தயாராகவில்லை என்றாலும், அவருக்காக காத்திருக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகவும், அவருக்கு பதிலாக மாற்று வீரரை சேர்ப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் பிசிசிஐ வட்டாரங்களில் கூறப்படுகிறது.