இந்திய ஆடவர் அணி கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராகும் விவிஎஸ் லட்சுமணன்
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பயிற்சி காலம் முடிவடைந்த நிலையில், அவர் மீண்டும் பயிற்சியாளராக விருப்பம் தெரிவிக்காததால், விவிஎஸ் லட்சுமணன் அடுத்த பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த அக்டோபர் 19ஆம் தேதி, குஜராத்தின் அகமதாபாத்தில் நடந்த, இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான உலகக் கோப்பை இறுதிப் போட்டியுடன், ராகுல் திராவிடன் பயிற்சி காலம் முடிவடைந்தது. ராகுல் டிராவிட் கடந்த 2021 ஆம் ஆண்டு, அப்போதைய பிசிசிஐ தலைவராக இருந்த சௌரவ் கங்குலியால், இரண்டு ஆண்டுகளுக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நிகழ்த்திய சாதனைகள்
இரண்டு ஆண்டுகள் இந்திய பயிற்சியாளராக செயல்பட்டு, ராகுல் டிராவிட் அணிக்கு பல வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார். இவரின் வழிநடத்தலில், இந்திய அணி, வரலாற்றில் முதல் முறையாக ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்தது. இந்த ஆண்டு நடந்த, ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இது தவிர இந்தியா, 2022 ஆம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் அரை இறுதிக்கு முன்னேறி இருந்தது. ராகுல் டிராவிட்டின் பயிற்சி காலத்தில் இந்திய அணி ஒரே ஒரு கோப்பையாக, ஆசிய கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன்
தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இல்லாதபோது, அப்பொறுப்பை விவிஎஸ் லட்சுமணன் கவனித்து வந்தார். இவரது தலைமையில் இந்தியா, அயர்லாந்துடான டி20 போட்டிகளை வென்றிருந்தது. மேலும் இன்று, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடங்கும் 5 டி20 போட்டிகளுக்கும், லட்சுமணன் பயிற்சியாளராக செயல்பட உள்ளார். இந்நிலையில், ராகுல் டிராவிட் பயிற்சியாளராக தொடர விருப்பம் தெரிவிக்காததால், அந்த இடத்தை லட்சுமணன் நிரப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக, இந்தியா-ஆஸ்திரேலியா மோதிய இறுதி போட்டிக்கு மத்தியில், அகமதாபாத் சென்ற லட்சுமணன், அங்கு முக்கிய பிசிசிஐ தலைவர்களை சந்தித்து இதுகுறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து நம்பத் தகுந்த பிசிசிஐ நபர் கூறுகையில், லட்சுமணனை நீண்ட கால பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
ராகுல் திராவிடன் எதிர்கால திட்டம் என்ன?
ராகுல் டிராவிட் தான் முன்பு வகித்திருந்த, தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் பதவிக்கு திரும்பிச் செல்ல விரும்புவதாக கூறப்படுகிறது. இது, அவர் தனது சொந்த ஊரான பெங்களூரிலேயே இருக்க வழிவகை செய்யும் எனவும், அதேசமயம் இந்தியாவிற்கு இடைக்கால பயிற்சியாளராக இருக்க அவர் தயாராக உள்ளார் எனும் கூறப்படுகிறது. மேலும் அவர், ஐபிஎல் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படுவதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக, டைம்ஸ் ஆப் இந்தியா கூறுகிறது.
மற்ற பயிற்சியாளர்களின் நிலை என்ன?
ராகுல் டிராவிட் உடன், இந்தியாவின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பில்டிங் பயிற்சியாளர் திலீப் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் பாராஸ் மாம்ப்ரே ஆகியோரின் பயிற்சி காலமும் முடிவடைந்தது. "இவர்கள் தொடரலாம் அல்லது லட்சுமணன், மற்ற எல்லா பயிற்சியாளர்களையும் போல, அவருக்கு என தனி பயிற்சியாளர்கள் குழுவை நியமித்துக் கொள்ளலாம்" என அந்த பிசிசிஐ நபர் கூறினார். இந்தியா அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவிற்கு ஒரு நாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களுக்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ள நிலையில், அதற்குள் அனைத்து பயிற்சியாளர்களும் நியமிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.