
விளையாட்டு வீரர்களுக்கான அர்ஜுனா விருதுகள் 2023: ஜனாதிபதி கையால் விருது பெற்றார் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி
செய்தி முன்னோட்டம்
ஆண்டுதோறும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு சார்பாக அர்ஜூனா விருது, கேல் ரத்னா விருது, துரோணாச்சார்யா விருது, மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த 2023 ஆம் ஆண்டிற்கான, இந்த விருதுகளை பெறும் வீரர்களின் பட்டியலை மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது.
குறிப்பாக, கிரிக்கெட் உலகக் கோப்பையில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, செஸ் கிராண்ட் மாஸ்டரான வைஷாலி, ஹாக்கியில் சிறந்து விளங்கிய கிரிஷன் பகதூர் பதக் உள்பட 26 வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டது.
card 2
விருதுகளை வழங்கிய ஜனாதிபதி திரௌபதி முர்மு
இந்த விருது வழங்கும் விழா டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் இன்று நடைபெற்றது. வீரர், வீராங்கனைகளுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருது வழங்கி கௌரவித்தார்.
விழாவில், முகமது ஷமி, கிராண்ட் மாஸ்டர் வைஷாலி உட்பட பலரும் கலந்து கொண்டனர். சிறந்த பயிற்சியாளருக்கு அளிக்கப்படும் துரோணாச்சார்யா விருது, செஸ் பயிற்சியாளர் ஆர்.பி.ரமேஷுக்கும், த்யான் சந்த் விருது கபடி வீராங்கனை கவிதா செல்வராஜுக்கும் வழங்கப்பட்டது.
மேலும், வில்வித்தை, ஹாக்கி, தடகளம், செஸ், பேட்மிண்டன், குதிரையேற்றம், கோல்ஃப், கபடி, ஸ்குவாஸ், டேபிள் டென்னிஸ், பாரா கேனோயிங் என்று பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கிய விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.