ஆசிய விளையாட்டு கிரிக்கெட் இறுதிப் போட்டி: கைகுலுக்கலைத் தவிர்த்த இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள்
செய்தி முன்னோட்டம்
ஜப்பானில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஆடவர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில், பாகிஸ்தானை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி தங்கப் பதக்கத்தை வென்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, அபிஷேக் சர்மாவின் 61 ரன்கள் மற்றும் திலக் வர்மாவின் ஆட்டமிழக்காத 51 ரன்கள் அதிரடியால் 20 ஓவர்களில் 211 ரன்கள் குவித்தது. கடின இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியில் ஹசன் நவாஸ் 96 ரன்கள் விளாசியபோதும், அந்த அணி 192 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. வங்கதேசத்தை வீழ்த்திய இலங்கை அணி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது.
இருநாட்டுப் பதற்றம்
கைகுலுக்கல் தவிர்ப்பு
இரு நாடுகளுக்கு இடையே நிலவும் அரசியல் பதற்றங்கள் காரணமாக நடுநிலையான மைதானங்களில் மட்டுமே விளையாடி வரும் சூழலில், போட்டியின் தொடக்கத்திற்கு முன்பும் போட்டி நிறைவடைந்த பின்னரும் இரு அணி வீரர்களும் வழக்கமான கைகுலுக்கலை முற்றிலும் தவிர்த்தனர்.
களத்தில் பாகிஸ்தான் ஹசன் நவாஸ் மற்றும் சயிம் அயூப் ஜோடி 87 ரன்கள் சேர்த்து மிரட்டிய போதும், சிவம் துபே மற்றும் வாஷிங்டன் சுந்தர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பினர்.
19-வது ஓவரை வீசிய ஜஸ்பிரித் பும்ரா வெறும் 11 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து இந்தியாவின் வெற்றியை முழுமையாக உறுதி செய்தார்.
ஜெய் ஷா வருகை
பதக்க விழாவில் ஏற்பட்ட திடீர் தாமதம்
போட்டி முடிவடைந்ததும் பதக்கம் வழங்கும் விழா தொடங்குவதில் நீண்ட தாமதம் ஏற்பட்டது.
பின்னர் மேடைக்கு வந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா, இந்திய அணி வீரர்களுக்கு மட்டுமே தங்கப் பதக்கங்களை அணிவித்தார்.
தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் வெண்கலம் வென்ற இலங்கை வீரர்களுக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் அதிகாரப்பூர்வ நிர்வாகிகள் பதக்கங்களை வழங்கினர்.
பதக்க விழாவின் போதும் இரு அணி வீரர்களுக்கு இடையே கைகுலுக்கல் எதுவும் நடைபெறவில்லை.
இந்தத் திடீர் தாமதத்திற்கும் மாற்றத்திற்கும் அமைப்பாளர்கள் தரப்பில் முறையான விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.