
INDvsAUS Final : அகமதாபாத் மைதானத்தில் இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணிகளின் புள்ளிவிபரங்கள்
செய்தி முன்னோட்டம்
நவம்பர் 19 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி மூன்றாவது முறையாக பட்டத்தை வெல்லும் முனைப்புடன் உள்ளது.
நடப்பு உலகக்கோப்பை சீசனில் இதுவரை விளையாடிய 10 போட்டிகளிலும் வெற்றியை பெற்று இந்தியா வலுவாக உள்ள நிலையில், முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்த ஆஸ்திரேலியா அதன் பிறகு மீண்டெழுந்து 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
ஆடுகளத்தைப் பொறுத்தவரை மைதானம் மற்றும் சூழ்நிலைகள் போட்டியை கடுமையாக வைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
INDvsAUS ODI Head to Head Stats
ஒருநாள் கிரிக்கெட்டில் நேருக்கு நேர் மோதல் புள்ளி விபரம்
ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையே மொத்தம் 150 போட்டிகள் நடந்துள்ளன.
இதில் இந்தியா பெற்ற 57 வெற்றிகளுடன் ஒப்பிடுகையில் ஆஸ்திரேலியா 83 வெற்றிகளுடன் மிகப்பெரிய அளவில் முன்னிலையில் உள்ளது. மேலும், 10 போட்டிகள் முடிவில்லாமல் முடிந்தது.
தவிர, ஒருநாள் உலகக்கோப்பையைப் பொறுத்தவரை இரு அணிகளும் 13 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், அதில் 8 முறை ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி 5 முறை மட்டுமே வென்றுள்ளது.
ஒருநாள் உலகக்கோப்பை நாக் அவுட் போட்டிகளை பொறுத்தவரை 2003 இறுதிப்போட்டி மற்றும் 2015 அரையிறுதியில் மோதியபோது இரண்டு ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியா அணியே வென்று முன்னிலையில் உள்ளது.
India ODI Performance in Narendra Modi Stadium
ஒருநாள் போட்டியில் நரேந்திர மோடி மைதானத்தில் இந்திய அணியின் செயல்திறன்
உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா 19 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 11 போட்டிகளில் வெற்றியையும் 8 போட்டிகளில் தோல்வியையும் பெற்றுள்ளது.
2002இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 325 ரன்களை எடுத்ததே இந்த மைதானத்தில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோராகும்.
1993ல் அதே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 100 ரன்கள் எடுத்ததே இந்த மைதானத்தில் இந்தியாவின் மிகக் குறைந்த ஸ்கோராகும்.
2010இல் தென்னாப்பிரிக்கா இந்தியாவுக்கு எதிராக எடுத்த 365 ரன்களே இந்த மைதானத்தில் ஒரு நாள் போட்டியில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோராகும்.
Indian Players performance in Narendra Modi Stadium
மைதானத்தில் இந்திய வீரர்களின் செயல்திறன்
இந்திய பேட்டர்களில், ரோஹித் ஷர்மா ஆறு ஒருநாள் போட்டிகளில் 51.16 என்ற சராசரியுடன் 307 ரன்களை இந்த மைதானத்தில் எடுத்துள்ளார். இதில் மூன்று அரைசதங்களும் அடங்கும்.
விராட் கோலி இங்கு எட்டு ஒருநாள் போட்டிகளில் 192 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரு அரைசதம் அடங்கும்.
இந்திய பந்துவீச்சாளர்களில், பிரசித் கிருஷ்ணா இங்கு மூன்று ஒருநாள் போட்டிகளில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இதற்கிடையில், முகமது சிராஜ் நான்கு ஒருநாள் போட்டிகளில் ஏழு விக்கெட்டுகளும், அஸ்வின் ரவிச்சந்திரன் மூன்று போட்டிகளில் 5 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர்.
ஒட்டுமொத்தமாக, அஸ்வின் இந்த மைதானத்தில் 32 சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் ஒரு ஐந்து விக்கெட்டும் அடங்கும்.
ODI Stats in Narendra Modi Stadium
ஒருநாள் கிரிக்கெட்டில் நரேந்திர மோடி மைதானத்தின் புள்ளிவிவரங்கள்
இந்த மைதானத்தில் மொத்தம் 32 ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணி 17 முறை வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா தவிர்த்து ஏனைய அணிகள் விளையாடிய போட்டிகளில் நடப்பு உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா இங்கிலாந்துக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ஸ்கோராக உள்ளது.
2006இல் ஜிம்பாப்வே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 85 ரன்கள் எடுத்ததே இந்த மைதானத்தில் ஒரு அணியின் குறைந்தபட்ச ஸ்கோராகும்.
பிட்சில் கருப்பு மண் இருப்பதால், ஆடுகளம் மெதுவாக இருக்கும் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக திரும்பும்.
நடப்பு ஒருநாள் உலகக்கோப்பையில் இந்த மைதானத்தில் எந்த அணியும் 300 ரன்களுக்கு மேல் அடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Australia performance in Narendra Modi Stadium
நரேந்திர மோடி மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியின் செயல்திறன்
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா சிறப்பான சாதனையை படைத்துள்ளது.
அந்த அணி ஆறு ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். மேலும் அதில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
அவர்களின் தோல்விகளில் ஒன்று 2011 உலகக்கோப்பை காலிறுதியில் இந்தியாவிடம் தோற்றது. அந்த தொடரில் இறுதியில் இந்தியா கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
நடப்பு உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக இந்த மைதானத்தில் விளையாடிய ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
Narendra Modi Stadium match results in 2023 ODI World Cup
2023 ஒருநாள் உலகக்கோப்பையில் நரேந்திர மோடி மைதானம்
மேலே கூறப்பட்டுள்ளபடி 2023 ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையில் இந்த மைதானத்தில் எந்த ஒரு அணியும் 300 ரன்களுக்கு மேல் அடிக்க முடியவில்லை.
இந்த தொடரில் ஆஸ்திரேலியா இங்கிலாந்துக்கு எதிராக எடுத்த 286 ரன்களே இங்கு அதிகபட்ச ஸ்கோராகும். அந்த போட்டியில் ஆஸ்திரேலியா 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி 44 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியதே இங்கு ஒரு பந்துவீச்சாளரின் சிறந்த புள்ளி விபரங்கள் ஆகும்.
பேட்டிங்கை பொறுத்தவரை இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்தின் டெவோன் கான்வே 152 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக உள்ளது.