LOADING...
தவறு நடந்துவிட்டது! நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது NCERT; எட்டாம் வகுப்பு பாடப்புத்தங்கள் வாபஸ்
நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது NCERT

தவறு நடந்துவிட்டது! நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது NCERT; எட்டாம் வகுப்பு பாடப்புத்தங்கள் வாபஸ்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 10, 2026
10:38 am

செய்தி முன்னோட்டம்

எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் நீதித்துறை குறித்து இடம் பெற்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) இன்று நாளிதழ்களில் நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கோரியுள்ளது. NCERT வெளியிட்ட எட்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் ஒரு அத்தியாயத்தில் "நீதித்துறையில் ஊழல்" என்ற தலைப்பில் ஒரு பகுதி இடம் பெற்றிருந்தது. இது நீதித்துறையின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் இருப்பதாகப் புகார்கள் எழுந்தன.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றத்தின் அதிரடி நடவடிக்கை

இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. சர்ச்சைக்குரிய அந்தப் புத்தகத்திற்கு நாடு முழுவதும் தடை விதித்ததுடன், அதன் டிஜிட்டல் பிரதிகளை நீக்கவும், அச்சிடப்பட்ட பிரதிகளைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டது. "இந்த அமைப்பின் நேர்மைக்குக் களங்கம் விளைவிக்க யாரையும் அனுமதிக்க மாட்டேன். இதற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்." என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் எச்சரித்தார்.

விளக்கம்

NCERTயின் விளக்கம் மற்றும் மன்னிப்பு

விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, NCERT நிர்வாகம் தற்காப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அதன்படி, "இந்த அத்தியாயத்தில் தவறான தகவல்கள் மற்றும் தவறான மதிப்பீடுகள் இடம் பெற்றுவிட்டன. இதற்காக நாங்கள் மன்னிப்பு கோருகிறோம்" எனத் தெரிவித்துள்ளனர். சர்ச்சைக்குரிய அந்தப் புத்தகம் முழுமையாகத் திரும்பப் பெறப்படுவதாகவும், இனி விற்பனைக்குக் கிடைக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கல்வி அமைச்சகம் சார்பில் மன்னிப்பு கோரினார். மேலும், இந்தத் தவறான தகவல்களைப் பாடப்புத்தகத்தில் சேர்த்த இரண்டு நபர்கள் இனி யுஜிசி அல்லது எந்த அமைச்சகத்திலும் பணியாற்றத் தடை விதிக்கப்படும் என உறுதியளித்தார். இருப்பினும், "அவர்கள் சுட்ட தோட்டா நீதித்துறையின் மீது பாய்ந்துவிட்டது" என்று தலைமை நீதிபதி தனது அதிருப்தியைத் தெரிவித்தார்.

Advertisement