LOADING...
அண்டார்டிகாவில் புதிய வகை பாக்டீரியாவைக் கண்டறிந்த இந்திய விஞ்ஞானிகள்
அண்டார்டிகாவில் புதிய பாக்டீரியா வகை கண்டுபிடிப்பு

அண்டார்டிகாவில் புதிய வகை பாக்டீரியாவைக் கண்டறிந்த இந்திய விஞ்ஞானிகள்

எழுதியவர் Prasanna
Mar 10, 2026
10:41 am

செய்தி முன்னோட்டம்

முற்றிலும் புதிய வகையிலான சிவப்பு நிற பாக்டீரியா ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் அண்டார்டிகாவில் கண்டறிந்துள்ளனர். அங்கே உள்ள ஒரு ஏரியில் இந்தப் புதிய வகையிலான பாக்டீரியாவை கண்டறிந்திருக்கின்றனர். ஆய்வுக்கூட சோதனையில் இந்த பாக்டீரியாவானது 85 நிமிடங்கள் வரை புறஊதா கதிர்களை எதிர்கொண்டு உயிர்பிழைக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது. இதன் சிவப்பு நிறம், புறஊதா கதிர்களில் இருந்து இதன் DNA-வை பாதுகாக்க உதவுகிறது. பூமியில் உயிர்கள் பிழைக்கும் சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாக இருக்கும் இடங்களில் அண்டார்டிகா முதன்மையாக இருக்கிறது. இந்த சூழ்நிலையிலும் ஒரு உயிர் தனித்துவமான பிழைக்கும் வாய்ப்பைக் கொண்டிருப்பது ஆச்சரியம் அளிப்பதாக இருக்கிறது.

பாக்டீரியா

இந்தய பெண் விஞ்ஞானியின் பெயர்

இந்தியாவில் இருந்து அண்டார்டிகாவுக்கு சென்ற முதல் பெண் விஞ்ஞானியான டாக்டர் அதிதி பண்ட்டை கௌரவிக்கும் விதமாக இந்த பாக்டீரியாவுக்கு அவரின் பெயரையே (Deinococcus pantiae sp. nov.) இந்திய விஞ்ஞானிகள் சூட்டியுள்ளனர். இது போன்ற உயிரினங்களை ஆய்வு செய்து படிப்பதன் மூலம், கடுமையான சூழல்களில் உயிர் பிழைத்திருத்தல் குறித்து நாம் தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலம் வேற்று கிரகங்களிலும் உயிர்கள் இருக்கும் சாத்தியக்கூறுகளை நாம் கண்டறிய முடியும். மேலும், இயற்கையிடமிருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்ளும் நுட்பங்களையும் இது போன்ற உயிரினங்களிடமிருந்து நாம் கண்டறிய முடியும்.

Advertisement