ICC 2023 ODI World Cup Semifinal : மழையால் போட்டி ரத்தானால் என்னாகும்? ஐசிசி விதி இதுதான்
புதன்கிழமை (நவ.15) தொடங்கி நாக் அவுட் சுற்றுகளில் நான்கு அணிகள் போட்டியிடும் நிலையில் ஒருநாள் உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதியின் முதல் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்திலும், இரண்டாவது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற உள்ளது. இருப்பினும், இந்தியாவில் பருவமழை பெய்துவரும் சமயத்தில் நாக் அவுட் போட்டிகள் நடைபெறுவதால், போட்டி பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ விளையாட முடியாமல் போக வாய்ப்புள்ளது. அவ்வாறு மழை அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காக தாமதம் ஏற்பட்டால், போட்டி முடிவடைய கட் ஆஃப் நேரம் என்ன, திட்டமிடப்பட்ட போட்டி நாளில் விளையாட முடியாவிட்டால் என்ன ஆகும்? ஏதாவது ரிசர்வ் நாள் உள்ளதா? என இதில் பார்க்கலாம்.
போட்டி நடைபெறும் நேரம்
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை 2023 அரையிறுதி ஆட்டங்கள் திட்டமிடப்பட்ட நாளில் மதியம் 2 மணிக்கு முதல் இன்னிங்ஸுடன் தொடங்கி, மாலை 5.30 மணிக்கு முடிவடையும். 30 நிமிட இடைவெளிக்குப் பிறகு, இரண்டாவது இன்னிங்ஸ் மீண்டும் மாலை 6 மணிக்குத் தொடங்கி இரவு 9.30 மணிக்கு முடிவடையும். டிரிங்க்ஸ் இடைவேளை அல்லது வீரர்கள் காயமடைந்தால் வழங்கப்படும் சிகிச்சைக்காக தேவைப்பட்டால், சிறிது நேரம் நீட்டிக்கப்படலாம். அதன்படி உதாரணமாக, முதல் இன்னிங்ஸ் மாலை 5.30 மணிக்கு பதிலாக மாலை 5.40 அல்லது 5.45 மணிக்கு முடியும். இதேபோல், இரண்டாவது இன்னிங்ஸ் திட்டமிட்டபடி 9.30 மணிக்கு அல்லாமல், அதிகபட்சம் 9.45 மணிக்கு முடிவடையலாம்.
போட்டியை திட்டமிடப்பட்ட நாளில் முடிக்க முடியாவிட்டால் என்னாகும்?
ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் நாக் அவுட் போட்டிகளுக்கு திட்டமிடப்பட்ட நாளில் போட்டியை முடிக்க 120 நிமிடங்கள் அதவாது 2 மணி நேரம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. எனினும், வானிலை அல்லது வேறு ஏதேனும் தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக போட்டிக்கு குறுக்கீடு ஏற்படும் போது மட்டுமே இது பொருந்தும். இதன்படி, மழை காரணமாக 2 மணிநேரம் தாமதம் ஏற்பட்டாலும், போட்டி இருதரப்பிலும் தலா 50 ஓவர்களுடன் முழுமையாக விளையாடப்படும். தாமதம் அல்லது குறுக்கீடு 120 நிமிடங்களுக்கு மேல் இருந்தால், டக்வொர்த்-லூயிஸ்-ஸ்ட்ரென் முறையின் அடிப்படையில் ஓவர்கள் குறைக்கப்படும்.
ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒரு ஓவர் குறைப்பு
120 நிமிடங்களுக்குள் போட்டி தொடங்கப்படாவிட்டால், ஒவ்வொரு ஐந்து நிமிட தாமதத்திற்கும் ஒரு ஓவர் குறைக்கப்படும். எடுத்துக்காட்டாக, மாலை 6 மணிக்கு போட்டி நின்று, இரவு 8 மணி வரை ஆட்டம் சாத்தியமில்லை என்றால், ஓவர்கள் இழக்கப்படாது. ஆனால் அதற்கு பின்னரும் போட்டி தாமதமானால் ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் ஒரு ஓவரை இழப்போம். இது 20 ஓவர்களாக குறையும் வரை தொடரும். அதாவது இரு அணிகளும் குறைந்தபட்சம் 20 ஓவர்கள் விளையாடி இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த விதி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்யும் அணி 50 ஓவர்களை எதிர்கொண்டாலும், இரண்டாவது அணிக்கு டக்வொர்த்-லூயிஸ் முறைப்படி குறைந்தபட்சம் 20 ஓவர்களாவது விளையாட வாய்ப்பு வழங்கப்படும்.
திட்டமிடப்பட்ட நாளில் 20 ஓவர்கள் விளையாட முடியாவிட்டால் என்னாகும்?
அனைத்து நாக் அவுட் போட்டிகளுக்கும் ரிசர்வ் நாள் உள்ளது. இதன்படி, திட்டமிடப்பட்ட நாளில் குறைந்தபட்சம் 20 ஓவர்கள் கூட முடியாவிட்டால், எஞ்சிய ஆட்டம் ரிசர்வ் நாளில் விளையாடப்படும். திட்டமிடப்பட்ட நாளில் ஒரு பந்துகூட வீசாமல் போட்டி ரத்து செய்யப்பட்டால், ரிசர்வ் நாளில் போட்டி முழுமையாக நடத்தப்படும். எனினும், ரிசர்வ் நாளிலும் போட்டியை முழுமையாக விளையாட முடியாமல் போனால், ஆட்டம் ரத்து செய்யப்பட்டு புள்ளிப்பட்டியலில் முன்னிலையில் இருக்கும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் அரையிறுதிக்கு நவம்பர் 16ஆம் தேதி ரிசர்வ் நாளாகவும், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு இடையே நடக்கும் இரண்டாவது அரையிறுதிக்கு நவம்பர் 17ஆம் தேதி ரிசர்வ் நாளாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.