Loading...
ஸ்டீபன் பிளெமிங் விலகியதை அடுத்து CSK பயிற்சியாளர் ரேஸில் தோனி, அஸ்வின் உள்பட 5 பேர்
CSK பயிற்சியாளர் ரேஸில் தோனி, அஸ்வின் உள்பட 5 பேர்

ஸ்டீபன் பிளெமிங் விலகியதை அடுத்து CSK பயிற்சியாளர் ரேஸில் தோனி, அஸ்வின் உள்பட 5 பேர்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 13, 2026
05:57 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் விசுவாசமான மற்றும் வெற்றிகரமான கூட்டணியாக கருதப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் அதன் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் இடையேயான 18 ஆண்டுகால பந்தம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. சிஎஸ்கே அணிக்கு 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்று தந்ததுடன், எம்.எஸ்.தோனியுடன் அசைக்க முடியாத நட்பை கொண்டிருந்த பிளெமிங்கை சிஎஸ்கே நிர்வாகம் விடுவித்துள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் சிஎஸ்கே ப்ளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாததால், நவீன டி20 கிரிக்கெட்டுக்கு பிளெமிங்கின் உத்திகள் செட் ஆகாது என்பதை உணர்ந்தே சிஎஸ்கே இந்த முடிவை எடுத்துள்ளது. பிளெமிங்கிற்குப் பதிலாக சிஎஸ்கே-வின் புதிய தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்க வாய்ப்புள்ள 5 முக்கிய நபர்களின் அலசல் இதோ:

#5

ஹேமங் பதானி

ஊடக அறிக்கைகளின்படி, தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் இந்திய வீரர் ஹேமங் பதானி இந்த ரேஸில் முன்னணியில் உள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்த பதானி, உலகளாவிய பயிற்சியாளர் அனுபவத்தைக் கொண்டவர்.

இந்திய இளம் திறமைகளை கண்டறிவதில் வல்லவரான இவர், 2024-ல் பிளெமிங் குறித்து பேசிய அதிரடி வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

"பிளெமிங் சிறந்த பயிற்சியாளர் என்றால் ஏன் சிஎஸ்கே-வைத் தவிர வேறு எங்கும் ஜெயிக்கவில்லை? தோனி இருப்பதால் தான் சிஎஸ்கே ஜெயிக்கிறது. தோனிதான் அங்கு எல்லாமே" என்று பதானி பேசியிருந்தது சிஎஸ்கே-வில் அவரது வருகைக்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

#4

தினேஷ் கார்த்திக்

சிஎஸ்கே நிர்வாகம் ஒரு இந்திய முகத்தை பயிற்சியாளராக நியமிக்க விரும்பினால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் ஆலோசகராக இருக்கும் தினேஷ் கார்த்திக் சிறந்த தேர்வாக இருப்பார்.

ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் ஆண்டி பிளவரிடம் பாடம் கற்ற கார்த்திக், தமிழ்நாடு உள்நாட்டு அணியை வழிநடத்திய அனுபவம் கொண்டவர்.

இவரை இழுப்பதன் மூலம் ஆர்சிபி அணியை பலவீனப்படுத்துவதோடு, சென்னை ரசிகர்களுடனான பிராந்திய இணைப்பையும் சிஎஸ்கே-வால் பலப்படுத்த முடியும்.

ADVERTISEMENT

#3

ராகுல் டிராவிட்

கடந்த ஆண்டே ராகுல் டிராவிட் மற்றும் சிஎஸ்கே இடையே பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல்கள் வெளியாயின.

இந்திய அணிக்கு டி20 உலக கோப்பையை வென்று தந்த டிராவிட், நவீன கிரிக்கெட்டின் தரவு பகுப்பாய்வு மற்றும் திட்டமிடலில் கில்லாடி.

இதுவரை ரிலாக்ஸ் மூடில் செயல்பட்டு வந்த சிஎஸ்கே-விற்கு, டிராவிட்டின் கண்டிப்பான மற்றும் நவீன அணுகுமுறை புதிய உத்வேகத்தைத் தரும்.

ADVERTISEMENT

#2

அஸ்வின் ரவிச்சந்திரன்

யாரும் எதிர்பாராத ஒரு ஆச்சரியமான தேர்வு அஸ்வினாக இருக்கலாம்.

சிஎஸ்கே-வின் லெஜண்டான அஸ்வின், கிரிக்கெட் நுணுக்கங்களை அக்குவேறான ஆணிவேறாக அறிந்தவர்.

அண்மையில் அவர் பேசுகையில், "விளையாடுவதை தாண்டி பயிற்சியாளராக பங்களிக்க விரும்புகிறேன். ராகுல் டிராவிட் நான் உள்நாட்டு அணியை வழிநடத்துவதை பார்த்துவிட்டு என் மீது நம்பிக்கை வைத்துள்ளார்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

கால்பந்து போட்டிகளை போல, எதிர்கால முதலீடாக அஸ்வினை சிஎஸ்கே பயிற்சியாளராக்கலாம்.

#1

எம்.எஸ். தோனி

இதைத் தாண்டி சிஎஸ்கே-விற்கு வேறு சிறந்த தேர்வு இருக்க முடியாது.

'சிஎஸ்கே என்றால் தோனி, தோனி என்றால் சிஎஸ்கே'.

கடந்த பல ஆண்டுகளாகவே அணியில் ஒரு பயிற்சியாளர் போன்ற பாத்திரத்தைத்தான் தோனி திரைமறைவில் செய்து வருகிறார்.

அதை இப்போது அதிகாரப்பூர்வமாக 'தலைமைப் பயிற்சியாளர்' என மாற்றுவது மட்டுமே பாக்கி.

தோனி பயிற்சியாளராக பொறுப்பேற்றால் அதைவிட சென்னை ரசிகர்களுக்கு வேறு என்ன மகிழ்ச்சி வேண்டும்?

ADVERTISEMENT