நவம்பர் 30 மக்களவை சிறப்பு அமர்வில் தாக்கலாகும் 3 முக்கிய மசோதாக்கள் என்னென்ன? முழு விவரம்
செய்தி முன்னோட்டம்
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் நோக்கில் வரும் திங்கட்கிழமை (நவம்பர் 30) மக்களவையில் 3 முக்கிய மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன. மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள அலுவல் பட்டியலின்படி மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அரசியலமைப்பு 132-வது திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை இரண்டாம் மசோதாவைத் தாக்கல் செய்ய உள்ளார். மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா யூனியன் பிரதேசங்கள் சட்டங்கள் திருத்த இரண்டாம் மசோதாவை அறிமுகப்படுத்த உள்ள நிலையில் கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பழைய மசோதாக்கள் திரும்ப பெறப்பட உள்ளன.
தொகுதி மறுவரையறை மசோதா
அரசியலமைப்பு 132-வது திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாவின் நோக்கம்
அரசியலமைப்பு 132-வது திருத்த மசோதா 2026 மக்களவை மற்றும் மாநில யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளில் மகளிர் இடஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கான சட்டக் கட்டமைப்பை உருவாக்குகிறது.
இதனுடன் இணைந்து தாக்கலாகும் தொகுதி மறுவரையறை இரண்டாம் மசோதா பெண்களுக்கான இடங்களை ஒதுக்கீடு செய்வதற்கும் தொகுதி எல்லைகளை மறுசீரமைப்பதற்கும் வழிவகை செய்கிறது.
இந்த மூன்று மசோதாக்களும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதால் மக்களவை விதி 66-ஐ தற்காலிகமாக நிறுத்தி வைத்து மூன்றையும் ஒரே நேரத்தில் விவாதித்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
யூனியன் பிரதேச சட்டங்கள்
டெல்லி, ஜம்மு-காஷ்மீர் மற்றும் புதுச்சேரிக்காக திருத்தப்படும் 3 யூனியன் பிரதேச சட்டங்கள்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்ய உள்ள யூனியன் பிரதேசங்கள் சட்டங்கள் திருத்த இரண்டாம் மசோதா மூலம் மூன்று முக்கியச் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளன.
அதன்படி யூனியன் பிரதேசங்கள் சட்டம் 1963 டெல்லி தேசியத் தலைநகர் ஆட்சி சட்டம் 1991 மற்றும் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019 ஆகியவை திருத்தப்பட உள்ளன.
இதன் மூலம் சட்டப்பேரவைகளைக் கொண்ட டெல்லி ஜம்மு-காஷ்மீர் மற்றும் புதுச்சேரி ஆகிய மூன்று யூனியன் பிரதேசங்களிலும் 33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு முழுமையாக அமலுக்கு வரும்.
தேசிய அரசியலில் பரபரப்பு
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக மற்றும் சரத் பவார் கட்சி ஆதரவால் தேசிய அரசியலில் பரபரப்பு
இந்தத் தொகுதி மறுவரையறை மசோதா குறித்து ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில் இந்தியா கூட்டணியில் உள்ள திமுக மற்றும் சரத் பவார் கட்சி இந்த மசோதாவுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளன.
தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கும் வகையில் 1971 மக்கள்தொகை விகிதாச்சார பாதுகாப்பு மற்றும் 25 ஆண்டுகள் முடக்கம் ஆகிய கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் ஆதரவளிப்பதாக திமுக எம்பி கனிமொழி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பின் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய மசோதா நிறைவேறினால் தமிழகத்தின் மக்களவை இடங்கள் 39-லிருந்து 59 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.