Loading...
விஷமுறிவு இல்லாத ஆபத்தான பாராகுவாட் டைகுளோரைடு களைக்கொல்லி மருந்துக்குத் தமிழகம் முழுவதும் தடை
விஷமுறிவு இல்லாத ஆபத்தான பாராகுவாட் டைகுளோரைடு களைக்கொல்லி மருந்துக்குத் தமிழகம் முழுவதும் தடை

விஷமுறிவு இல்லாத ஆபத்தான பாராகுவாட் டைகுளோரைடு களைக்கொல்லி மருந்துக்குத் தமிழகம் முழுவதும் தடை

எழுதியவர் Sekar Chinnappan
Nov 29, 2026
09:48 am

செய்தி முன்னோட்டம்

விஷமுறிவு இல்லாத காரணத்தால் நாடு முழுவதும் ஆண்டுக்கு சராசரியாக 17 ஆயிரம் உயிர்களைப் பறித்து வந்த பாராகுவாட் டைகுளோரைடு களைக்கொல்லி மருந்திற்குத் தமிழ்நாடு முழுவதும் முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 1.5 மில்லியன் மெட்ரிக் டன் அளவிற்கு பயன்படுத்தப்பட்டு வந்த இந்த நஞ்சு மருந்துக்கு மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம் நாடு தழுவிய தடை விதித்துள்ளது. இதன் தொடர்ச்சியாகத் தமிழக அரசு நவம்பர் 25 அன்று வெளியிட்ட அரசிதழ் மூலம் இத்தடை உத்தரவை மாநிலம் முழுவதும் உடனடியாக அமல்படுத்தியுள்ளது.

பயன்பாட்டுக்கு முழுத் தடை

உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு முழுத் தடை மற்றும் பதிவுச் சான்றிதழ்கள் ரத்து

தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவின்படி பாராகுவாட் டைகுளோரைடு மருந்தை உற்பத்தி செய்தல் இறக்குமதி செய்தல் எடுத்துச் செல்லுதல் விநியோகம் செய்தல் மற்றும் விற்பனை செய்வதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பூச்சிக்கொல்லி மருந்துகள் சட்டம் 1968-இன் பிரிவு 9-இன் கீழ் இம்மருந்திற்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட அனைத்துப் பதிவுச் சான்றிதழ்களும் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தியாளர்கள் தங்களது பழைய பதிவு சான்றிதழ்களை உடனடியாக மத்திய பூச்சிக்கொல்லி வாரியம் மற்றும் பதிவுக் குழுவிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மருந்து பறிமுதல்

தமிழகம் முழுவதும் சிறப்புக் குழுக்கள் நடத்திய சோதனையில் 35,415 லிட்டர் மருந்து பறிமுதல்

தடை உத்தரவைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வேளாண்மை உதவி இயக்குநர்கள் தலைமையில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுத் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மாநிலம் முழுவதும் உள்ள உற்பத்தி ஆலைகள் மொத்த விநியோக நிலையங்கள் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இதில் விதிகளை மீறி இருப்பில் வைக்கப்பட்டிருந்த மொத்தம் 35 ஆயிரத்து 415 லிட்டர் பாராகுவாட் டைகுளோரைடு களைக்கொல்லி மருந்து அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமைச்சர் எச்சரிக்கை

தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேளாண்மைத் துறை அமைச்சர் எச்சரிக்கை

தடையை மீறி இம்மருந்தை விற்பனை செய்யும் அல்லது பதுக்கி வைக்கும் நிறுவனங்கள் மீது பூச்சிக்கொல்லி மருந்துகள் சட்டம் 1968 மற்றும் விதிகள் 1971-இன் கீழ் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் மனித உயிரிழப்புகளைத் தடுக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள இந்தத் தடைக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விவசாயிகள் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இத்தடை உத்தரவை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT