மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 4 நாடுகளுக்கு ஏஐ சர்வர் விநியோகத்தை நிறுத்தியது என்விடியா; பின்னணி என்ன?
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் புதிய ஏற்றுமதி விதிகளைப் பின்பற்றுவதை உறுதி செய்யும் வகையில் மலேசியா சிங்கப்பூர் தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய 4 தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு செல்லும் ஏஐ சர்வர் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு டெல் மற்றும் சூப்பர் மைக்ரோ கம்ப்யூட்டர் உள்ளிட்ட தனது உற்பத்தி கூட்டாளர்களுக்கு என்விடியா நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள செய்தியின்படி பிராந்திய கூட்டாளர்கள் அமெரிக்க அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை ஆய்வு செய்யும் வரை இந்தத் தடை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய விதி
சீன நிறுவனங்களின் ரிமோட் அணுகலைத் தடுக்க அமெரிக்கா கொண்டு வந்த புதிய விதி
அமெரிக்கா நேரடியாக சீனாவுக்கு அதிநவீன சிப்களை விற்க தடை விதித்துள்ள நிலையில் பல சீன நிறுவனங்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள டேட்டா சென்டர்கள் வழியாக என்விடியா சர்வர்களை ரிமோட் முறையில் பயன்படுத்தி வந்தன.
ஆராய்ச்சி அமைப்பான இன்ஸ்டிடியூட் ஃபார் புரோகிரஸ் தகவல்படி மலேசியா உள்ளிட்ட வெளிநாட்டு டேட்டா சென்டர்கள் சீனாவின் மொத்த ஏஐ கணினித் திறனில் சுமார் 24 சதவீதத்தை வழங்கி வந்தன.
இதனை தடுக்கும் வகையில் அமெரிக்கா சமீபத்தில் ஏற்றுமதி விதிகளை கடுமையாக்கி வெளிநாட்டு டேட்டா சென்டர்கள் வழியாக சீன நிறுவனங்கள் கணினி திறனைப் பெறுவதற்கு இருந்த ஓட்டையை அடைத்துள்ளது.
டேட்டா சென்டர்
ஓபன்ஏஐ மற்றும் மெட்டாவின் டேட்டா சென்டர் திட்டங்களிலும் தாமதம் ஏற்படும் அபாயம்
என்விடியாவின் இந்த திடீர் விநியோக நிறுத்தம் சீன நிறுவனங்களை மட்டுமின்றி தென்கிழக்கு ஆசியாவில் டேட்டா சென்டர்களை அமைக்கத் திட்டமிட்டுள்ள அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களையும் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
குறிப்பாக என்விடியா ஆதரவு பெற்ற ஃபிர்மஸ் கிரிட் நிறுவனம் கடந்த செப்டம்பரில் ஓபன்ஏஐ நிறுவனத்திற்காக மலேசியாவில் அறிவித்த 2 டேட்டா சென்டர் திட்டங்களும் மெட்டா நிறுவனத்திற்கு சிப்களை வாடகைக்கு விடும் ஒப்பந்தமும் விநியோக தாமதத்தைச் சந்திக்கக்கூடும்.
மேலும் சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியாவில் உள்ள டேட்டா சென்டர் திட்டங்களுக்கு நிதி வழங்கும் முதலீட்டாளர்களும் தற்போதைய சூழலால் எச்சரிக்கையான போக்கைக் கடைப்பிடிக்க வாய்ப்புள்ளது.
அதிகரிக்கும் கண்காணிப்பு
அமெரிக்கா-சீனா ஏஐ போட்டியால் சர்வதேச விநியோக சங்கிலியில் அதிகரிக்கும் கண்காணிப்பு
அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான செயற்கை நுண்ணறிவு ஆதிக்கப் போட்டி தீவிரமடைந்துள்ள நிலையில் பிற நாடுகளுக்கு அனுப்பப்படும் சிப்கள் மீதும் அமெரிக்க அரசின் கண்காணிப்பு அதிகரித்துள்ளது.
வாடிக்கையாளர்களின் உரிமையாளர் கட்டமைப்பு மற்றும் இருப்பிடம் குறித்துக் கடுமையான ஆய்வுகளை மேற்கொண்ட பிறகே எதிர்காலத்தில் சர்வர் விநியோகத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என என்விடியா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.