கிங் படத்தில் நரைமுடி தோற்றத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? மனம் திறந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்
செய்தி முன்னோட்டம்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தனது வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் நடிக்க முடிவெடுத்ததன் சுவாரசியப் பின்னணியைப் பகிர்ந்துள்ளார். மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மெட்டா நிறுவனத்தின் ஹவுஸ் ஆஃப் இன்ஸ்டாகிராம் விழாவில் இயக்குநர் கரண் ஜோஹருடன் கலந்துகொண்ட அவர், தனது வரவிருக்கும் கிங் படத்தின் டாடி கூல் பாடலை வெளியிட்டார். அப்போது பேசிய ஷாருக்கான், மிகவும் இளம் வயது நடிகைகளுடன் ஜோடியாக நடித்தபோது ஏற்பட்ட தர்மசங்கடமான அனுபவத்தால், இனி தன் வயதுக்கேற்ற வேடங்களில் மட்டுமே நடிக்கத் தீர்மானித்ததாகத் தெரிவித்தார்.
ஹோம்வொர்க் முடித்தாயா என கேட்டேன்
படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரசிய சம்பவம்
பழைய திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்புத் தளத்தில் நடந்த சம்பவத்தை நினைவுகூர்ந்த ஷாருக்கான், இளம் கதாநாயகி ஒருவரின் கண்களைப் பார்த்துக் காதல் வசனம் பேசிக்கொண்டிருந்தபோது தங்களுக்கு இடையிலான வயது வித்தியாசம் திடீரென உறைத்ததாகக் கூறினார்.
உடனே காதல் வசனத்தை நிறுத்திவிட்டு, "நாளைக்குரிய கணக்கு வீட்டுப்பாடத்தை (Maths homework) முடித்துவிட்டாயா?" என அந்த நடிகையிடம் கேட்டதாக நகைச்சுவையாகப் பகிர்ந்தார்.
இந்த நிகழ்வுக்குப் பிறகே, 61 வயதாகும் தனக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் நடித்து, இளைய தலைமுறையினரும் ரசிக்கும்படியான கூலான ஹீரோவாகத் தோன்ற முடிவெடுத்ததாக அவர் விளக்கினார்.
டிசம்பர் 24ல் ரிலீஸ்
நரைத்த முடியுடன் மிரட்டும் கிங் லுக்
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள கிங் திரைப்படத்தில் ஷாருக்கான் நரைத்த முடியுடன் தனது வயதுக்கேற்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் மூலம் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் திரையரங்குகளில் அறிமுகமாகும் நிலையில், இளம் பெண்கள் தன்னைத் தங்கள் தந்தையைப் போலப் பார்க்க வேண்டும் என விரும்புவதாக ஷாருக்கான் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
கரீனா கபூர் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கானுடன் இணைந்து நடனமாடியுள்ள டாடி கூல் பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தீபிகா படுகோன், அபிஷேக் பச்சன், ராணி முகர்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கிங் படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.