'பென்னு' சிறுகோள் மாதிரியின் பரிசோதனை முடிவுகளை வெளியிட்ட நாசா
பூமியில் இருந்து விண்வெளியில் 9 கோடி கிமீ தொலைவில் உள்ள பென்னு சிறுகோளிலிருந்து பாறை மாதிரியை ஒசிரிஸ்-ரெக்ஸ் (OSIRIS-REx) திட்டத்தின் மூலம் பூமிக்கு எடுத்து வந்தது நாசா. 2017ம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் கீழ், ஏழு ஆண்டுகளுக்கு பிறகு சிறுகோளின் மாதிரியானது, கடந்த மாதம் செப்டம்பர் 24ம் தேதி பூமியை வந்தடைந்தது. இந்த சிறுகோளின் மாதிரியை அமெரிக்காவில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில், சுத்தமான அறையில் வைத்து பரிசோதனை செய்து வந்த நாசா, தற்போது அதன் முதற்கட்ட முடிவுகளை வெளியிட்டிருக்கிறது. இந்த சிறுகோள் மாதிரியை சோதனை செய்வதன் மூலம், பூமி உள்ளிட்ட சூரிய குடும்பத்தில் உள்ள பிற கோள்களின் தொடக்க காலத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும் என நாசா விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
பென்னு சிறுகோள் மாதிரியின் பரிசோதனை முடிவுகள்:
பென்னுவிலிருந்து பூமிக்கு கொண்டு வரப்பட்ட மாதிரியில் தண்ணீர் மற்றும் குறிப்பிட்ட அளவிலான கார்பன் ஆகியவற்றின் இருப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. இதன் மூலம் பூமியில் உயிர்கள் உருவாக, இது போன்ற சிறுகோள்களுடன் மோதல் ஏற்பட்டதும் ஒரு காரணமாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆம், பூமியில் உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற கோளாக மாறியதற்கு முக்கியமான காரணங்களுள் ஒன்று தண்ணீர் மற்றும் கார்பனின் இருப்பு தான். இந்த முதற்கட்ட பரிசோதனைகளைத் தொடர்ந்து, மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு பென்னு சிறுகோளின் மாதிரியை நாசா விஞ்ஞானிகள் பரிசோதனை செய்யவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேறு என்ன திட்டங்களைக் கொண்டிருக்கிறது நாசா?
இந்த மாதிரியை கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் விண்வெளி நிறுவனங்களின் ஆராய்ச்சிகளுக்காகவும் சிறிதளவு பகிர்ந்தளித்திருக்கிறது நாசா. பூமிக்கு கொண்டுவரப்பட்ட இந்த மாதிரியின் 70%-தத்தை பத்திரமாக தனியே எடுத்து பூட்டி வைத்துவிட்டதாம் அமெரிக்க விண்வெளி அமைப்பு. மீதமுள்ள 30%-தத்தையே அனைத்து விண்வெளி நிறுவனங்களும் ஆய்வு செய்யப் பயன்படுத்துகின்றன. எதிர்கால விஞ்ஞானிகள் இன்னும் மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்டு பென்னுவின் மாதிரியை சோதனை செய்து மேலதிக தகவல்களைக் கண்டறிவதற்காக அந்த மாதிரியை தனியே எடுத்து வைத்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது நாசா. அமெரிக்கா மட்டுமல்லாது மனித குலத்தில் விண்வெளி சாதனைகளில் இந்தத் திட்டமானது மற்றொரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.