ஸ்டார்லைனர்: ஆகஸ்ட் மாதத்திற்குள் சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவார்
போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் கேப்சூல் பூமிக்கு திரும்புவது மேலும் சில நாட்கள் தாமதமாகியுள்ளது. ஒரு வாரம் மட்டுமே என ஆரம்பத்தில் திட்டமிட இந்த விண்வெளி பயணத்தின் தற்போதைய அறிக்கையின்படி, போயிங் ஸ்டார்லைனர் கேப்சூலில் விண்வெளிக்கு பறந்த இரண்டு நாசா விண்வெளி வீரர்களும் ஆகஸ்ட் நடுப்பகுதி வரை அங்கேயே இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. விண்கலத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப சிக்கலை தீர்க்க நாசா விஞ்ஞானிகள் அதிக நேரம் எடுத்துக்கொள்வதால் இந்த திட்டமிடப்படாத தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) உள்ள இரண்டு விண்வெளி வீரர்களும் முற்றிலும் பாதுகாப்பாக இருப்பதாக விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாசா என்ன சொன்னது?
கேப்ஸ்யூல் சரியாக வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்வதற்கான சோதனைகளை மேற்கொண்டு வருவதாக நாசா நேற்று (ஜூலை 10) அறிவித்தது. இருப்பினும், அவசரகால வெளியேற்றத்திற்கு விண்கலம் பாதுகாப்பாக இருக்கும் என்று விண்வெளி நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது. "சில தரவுகள் நம்பிக்கைக்குரியதாக உள்ளது. ஆனால் நாங்கள் ஒவ்வொரு அடியிலும் தரவைப் பின்பற்றுவோம்" என்று நாசாவின் வணிகக் குழு திட்ட மேலாளர் ஸ்டீவ் ஸ்டிச் கூறினார். இந்த நிலையில், ISSஇல் சிக்கியுள்ள விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் விண்வெளியிலிருந்து, பூமிக்கு உரையாற்றினர். இதில் ஸ்டார்லைனர் கேப்ஸ்யூல் தன்னை பூமிக்கு அழைத்துச் செல்லும் என நம்புவதாக இருவரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.