Page Loader
எக்ஸ் தளத்திற்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு; பிரேசிலில் அதிரடி
எக்ஸ் தளத்திற்கு பிரேசிலில் தடை

எக்ஸ் தளத்திற்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு; பிரேசிலில் அதிரடி

எழுதியவர் Sekar Chinnappan
Aug 31, 2024
10:50 am

செய்தி முன்னோட்டம்

பிரேசிலில் உள்ள ஒரு சட்டப் பிரதிநிதியை பணியமர்த்த எக்ஸ் நிறுவனத்திற்கு விதித்த காலக்கெடு முடிவடைந்தும் பணியமர்த்தாததால், பிரேசில் உச்ச நீதிமன்ற நீதிபதி அந்நாட்டில் எக்ஸ் தளத்திற்கு தற்காலிக தடை விதித்தார். வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 30) வெளியிடப்பட்ட இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவின் ஒரு பகுதியாக பிரேசிலில் உள்ள எலான் மஸ்கின் செயற்கைக்கோள் இணைய வழங்குநரான ஸ்டார்லிங்கின் நிதிக் கணக்குகளும் முடக்கப்பட்டது. முடிவாக, சுமார் ரூ.27.66 கோடி அபராதம் செலுத்துதல் மற்றும் சட்டப் பிரதிநிதியின் நியமனம் உட்பட அனைத்து உத்தரவுகளையும் நிறைவேற்றும் வரை தடை அமலில் இருக்கும் என நீதிபதி மோரேஸ் உத்தரவிட்டுள்ளார்.

விபிஎன்

விபிஎன் பயன்படுத்தினால் அபராதம்

உச்ச நீதிமன்ற நீதிபதி மொரேஸ், அந்நாட்டு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை நிறுவனமான அனடெல்லுக்கு இடைநீக்க உத்தரவை அமல்படுத்தவும், அதைச் செயல்படுத்தியதை 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தவும் உத்தரவிட்டார். இதையடுத்து எக்ஸ் தளத்தை விபிஎன் மூலம் பயன்படுத்துவதைத் தடுக்க, அதுபோன்ற முயற்சியில் ஈடுபடும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு சுமார் ரூ.7.47 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மோரேஸ் கூறினார். முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில், திரிபுபடுத்தப்பட்ட செய்திகள் மற்றும் வெறுப்புணர்வை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட எக்ஸ் கணக்குகளை முடக்க மோரேஸ் உத்தரவிட்ட நிலையில், அதை கண்டித்த எலான் மஸ்க், பிரேசிலில் உள்ள தனது அலுவலகங்களை மூடினார். இதுவே எக்ஸ் மீதான நீதிபதி மோரேஸின் கடுமையான நடவடிக்கைக்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.