Loading...
தாயின் கருப்பையில் இருந்த 25 வார சிசுவிற்கு அறுவை சிகிச்சை செய்த டெல்லி AIIMS மருத்துவர்கள்
இந்தியாவின் முதல் ஓபன் ஃபீடல் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு சாதனை படைத்துள்ளனர்

தாயின் கருப்பையில் இருந்த 25 வார சிசுவிற்கு அறுவை சிகிச்சை செய்த டெல்லி AIIMS மருத்துவர்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 18, 2026
04:28 pm

செய்தி முன்னோட்டம்

அறிவியல் புனைகதைகளில் மட்டுமே சாத்தியம் என்று கருதப்பட்ட மருத்துவ அதிசயம் இந்தியாவில் நிஜமாகியுள்ளது. டெல்லியில் உள்ள AIIMS மருத்துவர்கள், தாயின் கருப்பையில் இருந்த 25 வார சிசுவிற்கு இந்தியாவின் முதல் ஓபன் ஃபீடல் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு சாதனை படைத்துள்ளனர். நவம்பர் 12-ஆம் தேதி சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற இந்தச் சிக்கலான அறுவை சிகிச்சையில், சிசுவின் முதுகெலும்பில் இருந்த தீவிர பிறவிக் குறைபாடு சரிசெய்யப்பட்டது. மகப்பேறு மருத்துவர்கள், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்கவியல் நிபுணர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய 30-க்கும் மேற்பட்ட மருத்துவக் குழுவினர் 5 வாரங்களுக்கும் மேலான திட்டமிடலுக்குப் பிறகு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

விவரங்கள்

'Myelomeningocele' குறைபாடு என்றால் என்ன?

கர்ப்பத்தின் ஆரம்ப வாரங்களில் குழந்தையின் மூளை மற்றும் முதுகுத்தண்டாக உருவாகும் 'நியூரல் டியூப்' முழுமையாக மூடப்படாததால் ஏற்படும் பிறவி குறைபாடு ஸ்பைனா பிஃபிடா எனப்படுகிறது.

இதன் மிகவும் தீவிரமான வடிவமே லம்போசாக்ரல் மைலோமெனிங்கோசீல் ஆகும்.

குழந்தையின் முதுகெலும்பில் ஏற்படும் திறப்பு வழியாக முதுகுத்தண்டு மற்றும் அதன் பாதுகாப்பு சவ்வுகள் வெளியே துருத்திக்கொண்டு ஒரு பை போன்று உருவாகும்.

இதனால் வெளிப்படும் நரம்புகள் சேதமடைந்து, குழந்தை பிறந்த பிறகு கால்களை அசைக்க முடியாமல் போவது, சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும். மேலும் மூளையில் நீர் சேரும் அபாயமும் உள்ளது.

அறுவை சிகிச்சை

தாயின் வயிற்றுக்குள் அறுவை சிகிச்சை நடந்தது எப்படி?

வழக்கமாக குழந்தை பிறந்த பிறகே இந்த அறுவை சிகிச்சை செய்யப்படும். ஆனால், அதுவரை கர்ப்ப காலத்தில் பனிக்குட நீரில் சிசுவின் நரம்புகள் தொடர்ந்து சேதமடைய வாய்ப்புள்ளது.

அதைத் தடுக்கவே தாயின் கருப்பைக்குள்ளேயே அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

ஸ்கேன்கள் மூலம் குறைபாட்டின் அளவு துல்லியமாகக் கண்டறியப்பட்டது.

சிறப்பு மயக்க மருந்து செலுத்தப்பட்ட பிறகு, தாயின் வயிறு மற்றும் கருப்பையில் சிறிய கீறல் இடப்பட்டு, சிசுவின் முதுகுப் பகுதி மட்டும் வெளியே தெரியும்படி வைக்கப்பட்டது.

நவீன நுண்ணோக்கிகள் உதவியுடன் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சிசுவின் முதுகெலும்பு திறப்பை மிக நுணுக்கமாக மூடினர்.

சிகிச்சை முடிந்ததும் கருப்பை மற்றும் வயிற்றுப் பகுதி தையலிடப்பட்டு, குழந்தை தொடர்ந்து தாயின் வயிற்றிலேயே வளர வழிவகை செய்யப்பட்டது.

ADVERTISEMENT

சவால்

உலகளாவிய வரலாறும் அறுவை சிகிச்சையில் உள்ள சவால்களும்

1990-களில் அமெரிக்காவில் தொடங்கப்பட்ட இந்த வகை சிகிச்சை, 2011-ஆம் ஆண்டு வெளியான 'MOMS' மருத்துவ ஆய்வுக்குப் பிறகு அங்கீகரிக்கப்பட்டது.

பிறந்த பிறகு சிகிச்சை பெறுபவர்களை விட, கருப்பையிலேயே சிகிச்சை பெற்ற குழந்தைகளுக்கு மூளையில் நீர் சேரும் பாதிப்பு 82 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக குறைந்தது ஆய்வில் உறுதியானது.

ஐரோப்பாவில் நுண்துளை முறையிலும் இது செய்யப்படுகிறது.

ஒரே நேரத்தில் தாய் மற்றும் சிசு ஆகிய இரு உயிர்களுக்குச் சிகிச்சை அளிப்பதால் குறைப்பிரசவம், பனிக்குடம் உடைதல் மற்றும் தாயின் கருப்பையில் தழும்பு பலவீனமடைதல் போன்ற அபாயங்கள் இதில் உள்ளன.

இதனால் இவர்களுக்குத் திட்டமிட்ட சிசேரியன் மூலமே பிரசவம் பார்க்கப்படும்.

ADVERTISEMENT

தடுப்பு முறை

இந்திய பொது சுகாதாரத் துறைக்கு கிடைத்த வெற்றி & தடுப்பு முறை

தனியார் மருத்துவமனைகளில் பல லட்சம் ரூபாய் செலவாகும் இந்த உயர்தர அறுவை சிகிச்சையை, மத்திய அரசின் 'ஜனனி சிசு சுரக்ஷா காரியக்ரம்' திட்டத்தின் கீழ் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை முற்றிலும் இலவசமாக செய்துள்ளது ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.

கருத்தரித்த முதல் 28 நாட்களுக்குள்ளேயே சிசுவின் நியூரல் டியூப் மூடிவிடும் என்பதால், கர்ப்பத்திற்குத் திட்டமிடும் பெண்கள் கருத்தரிப்பதற்கு முன்பிலிருந்தே கர்ப்பத்தின் முதல் 12 வாரங்கள் வரை தினமும் 400 மைக்ரோகிராம் ஃபோலிக் அமிலம் மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனையுடன் எடுத்துக்கொள்வது இத்தகைய குறைபாடுகளை 75% வரை தடுக்கும் என உலக சுகாதார நிறுவனமும் (WHO) இந்திய தேசிய சுகாதார இயக்கமும் வலியுறுத்துகின்றன.

ADVERTISEMENT