தொடர்ந்து 7வது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக பின்லாந்து தேர்வு; இந்தியா எந்த இடம் தெரியுமா?
ஐ.நா.வின் வருடாந்திர உலக மகிழ்ச்சி அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கைபடி, பின்லாந்து தொடர்ந்து ஏழாவது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக உள்ளது. மகிழ்ச்சி குறியீட்டில் கடந்த ஆண்டைப் போலவே இந்தியா 126வது இடத்தில் உள்ளது. பின்லாந்தை தொடர்ந்து டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் ஸ்வீடன் உள்ளிட்ட 10 நோர்டிக் நாடுகளும் தங்கள் இடங்களை தக்க வைத்துள்ளன. 2020இல் தாலிபான்கள் நாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்ததிலிருந்து மனிதாபிமான பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான், கணக்கெடுக்கப்பட்ட 143 நாடுகளில் கடைசி இடத்தில் உள்ளது. அறிக்கை வெளியிடப்பட்டதிலிருந்து முதல் முறையாக, அமெரிக்காவும் ஜெர்மனியும் 20 மகிழ்ச்சியான நாடுகளில் இல்லை. மாறாக முறையே 23 மற்றும் 24 வது இடத்தில் வருகின்றன.
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் அதிகரிக்கும் மகிழ்ச்சியின் தரவுகள்
சுவாரசியமாக, கோஸ்டாரிகா மற்றும் குவைத் 12 மற்றும் 13ல், அதாவது முதல் 20 இடங்களுக்குள் நுழைந்துள்ளன. மகிழ்ச்சியான நாடுகளில், உலகின் பெரிய நாடுகள் எதுவும் இடம்பெறவில்லை என்று அறிக்கை குறிப்பிட்டது. எனினும், முதல் 10 நாடுகளில் நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் மட்டுமே 15 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ளது. அதேபோல முதல் 20 நாடுகளில், கனடா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் மட்டுமே 30 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை உள்ளது. 2006-10 முதல் ஆப்கானிஸ்தான், லெபனான் மற்றும் ஜோர்டானில் 'மகிழ்ச்சி'யின் கூர்மையான சரிவு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான செர்பியா, பல்கேரியா மற்றும் லாட்வியா ஆகியவை மிகப்பெரிய அதிகரிப்புகளைப் பதிவு செய்துள்ளன.
எதை வைத்து 'மகிழ்ச்சி' கணக்கிடப்படுகிறது?
மகிழ்ச்சி தரவரிசையானது, தனிநபர்களின் வாழ்க்கைத் திருப்தி, அத்துடன் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி, சமூக ஆதரவு, ஆரோக்கியமான ஆயுட்காலம், சுதந்திரம், தாராள மனப்பான்மை மற்றும் ஊழல் ஆகியவற்றின் சுய மதிப்பீடுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. பின்லாந்து மக்களுக்கு இயற்கையுடன் உள்ள நெருங்கிய தொடர்பு, ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலை வலுவான நலன்புரிச் சங்கம், மாநில அதிகாரிகள் மீதான நம்பிக்கை, குறைந்த அளவிலான ஊழல் மற்றும் இலவச மருத்துவம் மற்றும் கல்வி ஆகியவை அவர்களின் மகிழ்ச்சிக்கு உந்துகோலாக உள்ளது. வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில், 2006-10ல் இருந்து 30 வயதிற்குட்பட்ட குழுக்களிடையே 'மகிழ்ச்சி' என்பது வியத்தகு அளவில் குறைந்துள்ளது எனவும் தற்போது இளைஞர்களை விட, மூத்த தலைமுறையினர் மகிழ்ச்சியாக உள்ளனர் எனவும் அந்த அறிக்கையில் தெரியவந்துள்ளது.