LOADING...
சிக்ஸ் பேக் உடம்பு.. சைலன்ட் அட்டாக் ஆபத்து: இந்திய இளைஞர்களை பதறவைக்கும் 'மறைமுக' நோய்கள்!
இந்திய இளைஞர்களின் உள் உறுப்புகள் மிக வேகமாக நோய்வாய்ப்பட்டு வருவதாக அறிக்கை

சிக்ஸ் பேக் உடம்பு.. சைலன்ட் அட்டாக் ஆபத்து: இந்திய இளைஞர்களை பதறவைக்கும் 'மறைமுக' நோய்கள்!

எழுதியவர் Vasuki
Jun 24, 2026
06:39 pm

செய்தி முன்னோட்டம்

தற்காலத்தில் நம்மைச் சுற்றியுள்ள 20 மற்றும் 30 வயதுகளில் இருக்கும் இளைஞர்களைப் பார்க்கும்போது, ஜிம்முக்குச் சென்று கட்டுக்கோப்பான உடலமைப்பை பராமரிப்பதையும், ஒல்லியாகக் கச்சிதமாக இருப்பதையும் பெருமையாகக் கருதுவதைக் காணலாம். வெளியில் பார்ப்பதற்கு மிகவும் 'ஃபிட்டாகவும்' சுறுசுறுப்பாகவும் இருப்பதால், இவர்களுக்கு எந்தவித உடல்நலப் பாதிப்பும் வராது என்றே நாமும் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், வெளியில் தெரியும் இந்த அழகிய தோற்றத்திற்குப் பின்னால், இந்திய இளைஞர்களின் உள் உறுப்புகள் மிக வேகமாக நோய்வாய்ப்பட்டு வருவதாகத் தற்போதைய மருத்துவத் தரவுகள் எச்சரிக்கின்றன. இளம் வயதிலேயே திடீரென ஏற்படும் மாரடைப்பு, சர்க்கரை நோய் மற்றும் கல்லீரல் செயலிழப்பு போன்ற ஆபத்துகளின் பின்னணியில் இருக்கும் அதிர்ச்சியூட்டும் உண்மைகளை இங்கே காண்போம்.

'ஃபிட்னஸ்' என்பது வெறும் வெளித்தோற்றம் மட்டுமே!

'ஃபிட்னஸ்' என்பது வெறும் வெளித்தோற்றம் மட்டுமே!

உடலை ஒல்லியாக வைத்திருப்பது அல்லது தசைகளை வலுப்படுத்துவது மட்டுமே முழுமையான ஆரோக்கியத்திற்கு சான்று என்று தற்போதைய தலைமுறை தவறாகக் கணிக்கிறது. கணினி மற்றும் ஸ்மார்ட்போன் திரைகளுக்கு முன்பாக, ஒரே இடத்தில் பல மணி நேரம் அசையாமல் அமர்ந்து வேலை செய்யும் நவீனக் கலாச்சாரம் உடலின் உள் இயக்கத்தை முடக்கிவிடுகிறது. வாரம் முழுவதும் எந்தவித அசைவும் இன்றி நாற்காலியிலேயே அமர்ந்திருந்து விட்டு, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஜிம்மில் வியர்வை சிந்துவதால் எந்தப் பயனும் இல்லை. வெளியில் சுறுசுறுப்பாகத் தெரிந்தாலும், தொடர்ச்சியான வேலைப் பளு மற்றும் மன உளைச்சல் காரணமாக உடலின் ஹார்மோன் சமநிலை சீர்குலைந்து, ரத்த அழுத்தமும் சர்க்கரையின் அளவும் உள்ளுக்குள்ளேயே ரகசியமாக உயரத் தொடங்குகின்றன.

முறையற்ற உணவுமுறை

ஆன்லைன் உணவுகளும்.. இன்சுலின் பாதிப்பும்..

இன்றைய இளைஞர்களின் சமையலறைகள் பெரும்பாலும் ஆன்லைன் உணவு டெலிவரி செயலிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. வீட்டில் சமைக்கும் எளிய உணவுகளைத் தவிர்ப்பதே இவர்களின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைகிறது. காலையில் சாப்பிடாமல் ஓடுவது, நள்ளிரவில் அதிகக் கொழுப்புள்ள கனமான உணவுகளை ஆர்டர் செய்து உண்பது, கணினியைப் பார்த்துக்கொண்டே அவசர அவசரமாக உணவை விழுங்குவது போன்ற பழக்கங்கள் இன்சுலின் சுரப்பைத் தலைகீழாக மாற்றுகின்றன. இதன் நேரடி விளைவாக, மிகச் சிறிய வயதிலேயே கல்லீரலில் கொழுப்பு படிதல் மற்றும் நாள்பட்ட செரிமானக் கோளாறுகள் ஏற்படுகின்றன.

Advertisement

சுகாதார நிறுவனம் அறிக்கை

'ஆரோக்கிய உணவு' என்ற போர்வையில் நடக்கும் வியாபாரம்

சந்தையில் விற்கப்படும் 'டயட் உணவுகள்', 'புரோட்டீன் பார்கள்', மற்றும் 'லோ-ஃபேட் ஸ்நாக்ஸ்கள்' ஆரோக்கியமானவை என்று விளம்பரங்களின் மூலம் மூளைச்சலவை செய்யப்படுகின்றன. உடல் எடையைக் குறைக்க நினைக்கும் இளைஞர்கள் இவற்றை அசைக்க முடியாத நம்பிக்கையுடன் வாங்கி உண்கிறார்கள். அமெரிக்கத் தேசிய சுகாதார நிறுவனம் (NIH) நடத்திய ஆய்வின்படி, இந்தச் செயற்கை டயட் பொருட்களில் சுவையை கூட்டுவதற்காக உடலுக்குப் பெரும் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களும், மறைமுகச் சர்க்கரையும் கொட்டிக் கிடக்கின்றன. இவை உடலின் வளர்சிதை மாற்றத்தை அடியோடு சிதைத்து, நோய்களைச் சத்தமில்லாமல் வளர்க்கும் விஷமாக மாறுகின்றன.

Advertisement

தூக்கமின்மை

நள்ளிரவுத் திரைகளும்.. மரபணுப் பின்னணியும்..

நள்ளிரவைத் தாண்டியும் சமூக ஊடகங்களை உலாவுவது மற்றும் தூக்கத்தைத் தியாகம் செய்வது போன்ற காரணங்களால், உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு அரண் (Immunity) முற்றிலுமாக உடைகிறது. தூக்கமின்மை இதயத்தின் செயல்பாட்டை நேரடியாகப் பாதிக்கிறது. பலருக்குப் பரம்பரை ரீதியாகவே சர்க்கரை நோய் அல்லது மாரடைப்பு ஏற்படுவதற்கான மரபணுக்கள் உடலில் தூங்கும் நிலையில் இருக்கும். முறையற்ற வாழ்க்கை முறையைக் கையாளும்போது, அந்த மரபணுக்கள் மிக விரைவாக விழித்துக் கொண்டு, 25 வயதிலேயே நோய்களைத் தீவிரமாக்குகின்றன.

ஆரோக்கியமான்வாழ்க்கை

இதிலிருந்து தப்பிப்பதற்கான எளிய வழிகள்:

ஆரோக்கியமாக வாழ கடுமையான டயட் சட்டங்களையோ, விலையுயர்ந்த புரோட்டீன் டப்பாக்களையோ தேடி ஓட வேண்டிய அவசியமில்லை என்கிறார்கள் மருத்துவர்கள். விளம்பர உணவுகளைத் தவிர்த்து, நமது ஊர் மண்ணில் விளையும் பாரம்பரியச் சிறுதானியங்கள், கீரைகள் மற்றும் அந்தந்தக் காலநிலைக்கு ஏற்ற எளிய உணவுகளைச் சாப்பிடுங்கள். மொபைல் போனைப் பார்த்துக் கொண்டு அரக்கப்பரக்கச் சாப்பிடாமல், உணவை ரசித்து, மென்று, அமைதியான மனநிலையோடு உட்கொள்ளப் பழகுங்கள். ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்வதைத் தவிர்த்து, வேலைக்கு நடுவே சிறிய இடைவெளிகளை எடுத்துக்கொண்டு நடங்கள். தினமும் 30 நிமிடங்கள் எளிய உடற்பயிற்சி போதுமானது. குடும்பத்தில் யாருக்கேனும் சர்க்கரை அல்லது இதய நோய் வரலாறு இருந்தால், 25 வயதைக் கடந்தவுடனேயே ஆண்டுக்கு ஒருமுறை முறையான மருத்துவப் பரிசோதனையை செய்துகொள்வது நல்லது.

Advertisement