கடும் மழையிலும் உணவை டெலிவெரி செய்த சோமாட்டோ ஊழியர்; இணையத்தில் குவியும் பாராட்டு
மும்பையில் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல வாகனங்கள் மற்றும் ரயில் போக்குவரத்து தடைபட்டது. பல விமானங்கள் திருப்பி விடப்பட்டன, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடும்மழையில் திறந்திருந்த வடிகால் அமைப்பில் ஒரு பெண் விழுந்து உயிரிழந்த சோக சம்பவமும் நடைபெற்றது. இந்த நிலையில், Zomato டெலிவரி ஏஜென்ட் ஒருவர், இடிமழையே பெய்தாலும் எனது கடமையிலிருந்து தவற மாட்டேன் என உணவை டெலிவரி செய்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடும் மழையிலும் உழைக்கும் உணவு டெலிவரி ஏஜெண்டுகள்
ரஹத் அலி கான் என பெயர் கொண்ட அந்த நபரின் பைக் மழையினால் பழுதடைந்த போதும், நகரத்தின் தண்ணீர் தேங்கிய தெருக்களில் நடந்து சென்று உணவை டெலிவரி செய்துள்ளார். இந்த கடும் மழையில், ரஹத் அலி கான் ஒன்றல்ல, இரண்டு டெலிவெரிகளை வெற்றிகரமாக முடித்துள்ளார். இந்த சம்பவத்தை ரஹத் உணவை டெலிவரி செய்த வாடிக்கையாளர்களில் ஒருவரான ஸ்வாதி மிட்டல் என்பவர், X இல் ஒரு இடுகையில் பதிவிட்டு, ரஹத்தின் அர்ப்பணிப்பைப் பாராட்டினார். இதை தொடர்ந்து இணையத்தில் பலரும் அவரின் செயலை பாராட்டி வருகின்றனர். ஒரு சிலர் மழையின் தீவிரத்தை கருதாமல் அவர்களை உழைக்க சொல்லும் நிறுவனத்தின் மீதும், வாடிக்கையாளர் மீதும் குற்றம் சுமத்தினர்.