ஷெங்கன் விசா விண்ணப்பத்தில் உலகளவில் 3-வது இடம் பிடித்த இந்தியா
செய்தி முன்னோட்டம்
சர்வதேச சுற்றுலா மற்றும் வணிகப் பயணங்களில் இந்தியர்களின் பங்களிப்பு ஆண்டுதோறும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, ஐரோப்பிய நாடுகளுக்கான ஷெங்கன் விசா விண்ணப்பங்களை பொறுத்தவரை சீனா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா உலகின் மூன்றாவது பெரிய சந்தையாக உருவெடுத்துள்ளது. அப்ராட் கேட்வே வெளியிட்டுள்ள 2025-ஆம் ஆண்டிற்கான புதிய தரவுகளின்படி, கடந்த ஆண்டில் மட்டும் 11.5 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் ஷெங்கன் விசாவிற்கு விண்ணப்பித்துள்ளனர்.
விருப்பமான நாடு
84.2 சதவீத விசா ஒப்புதலும், இந்தியர்களின் விருப்பமான நாடும்
2025-ஆம் ஆண்டில் சுற்றுலா, வணிகம் மற்றும் குடும்ப வருகை ஆகிய நோக்கங்களுக்காக இந்தியாவிலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட 11.5 லட்சம் விண்ணப்பங்களில், 9,67,000-க்கும் மேற்பட்ட விசாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் சுமார் 1,81,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
புள்ளிவிவரங்களின் அடிப்படையில், இந்திய விண்ணப்பதாரர்களில் 84.2 சதவீதம் பேர் வெற்றிகரமாக விசா பெற்றுள்ள நிலையில், 15.8 சதவீதம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
மேலும், ஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி, இந்தியர்களின் மிகவும் விருப்பமான ஷெங்கன் விசா இலக்காக சுவிட்சர்லாந்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அனுமதி
பலமுறை நுழைவு அனுமதியும் தொடர் பயணங்களும்
இந்தியாவிலிருந்து ஷெங்கன் விசா பெற்றவர்களில் சுமார் 58 சதவீதம் பேருக்குப் பலமுறை நுழைவு அனுமதி எனப்படும் மல்டிபிள் என்ட்ரி விசா வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்யும் இந்தியர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஒருமுறை மட்டுமல்லாமல், மீண்டும் மீண்டும் ஐரோப்பாவிற்கு சென்று வருவது உறுதியாகியுள்ளது.
இது இந்தியப் பயணிகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான வலுவான சுற்றுலா மற்றும் வர்த்தகத் தொடர்புகளை பிரதிபலிக்கிறது.
விசா நிராகரிப்பு
அதிக விசா நிராகரிப்பு விகிதம் கொண்ட ஐரோப்பிய நாடுகள்
ஒட்டுமொத்தமாக இந்தியர்களின் விசா ஒப்புதல் விகிதம் 84.2 சதவீதமாக சிறப்பாக இருந்தபோதிலும், சில ஐரோப்பிய நாடுகள் இந்திய விண்ணப்பதாரர்களின் விசாக்களை பெருமளவில் நிராகரித்துள்ளன.
குறிப்பாக, ஸ்லோவேனியா நாட்டில் விசா நிராகரிப்பு விகிதம் மிக அதிகபட்சமாக 46.1 சதவீதமாகப் பதிவாகியுள்ளது; அதாவது அந்நாட்டிற்கு விண்ணப்பித்த இந்தியர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கு அடுத்தபடியாக பல்கேரியா 37 சதவீதமும், கிரீஸ் 33 சதவீதமும், மால்டா 31.7 சதவீதமும், எஸ்டோனியா 30.1 சதவீதமும் விண்ணப்பங்களை நிராகரித்துள்ளன.
மேலும், குரோஷியா 27.1 சதவீதம், ஆஸ்திரியா 21.6 சதவீதம் மற்றும் நெதர்லாந்து 20.6 சதவீதம் என்ற அளவில் விசாக்களை நிராகரித்துள்ளன.
கிரீஸ்
கிரீஸ் நாட்டின் விசா நிலவரம்
இந்திய சுற்றுலா பயணிகளிடையே மிகவும் பிரபலமான மற்றொரு முக்கிய சுற்றுலாத் தலமான கிரீஸ் நாட்டிற்கு 2025-ஆம் ஆண்டில் மொத்தம் 41,009 விசா விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
ஆனால், அவற்றில் 13,532 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு, 33 சதவீத நிராகரிப்பு விகிதத்தை பதிவு செய்துள்ளது.
உலகின் மூன்றாவது பெரிய ஷெங்கன் விசா சந்தையாக இந்தியா வளர்ந்துள்ள நிலையில், ஐரோப்பியப் பயணத்தைத் திட்டமிடும் இந்தியர்கள் அந்தந்த நாடுகளின் விசா விதிமுறைகள் மற்றும் ஆவணத் தேவைகளைத் துல்லியமாகப் பூர்த்தி செய்வது அவசியமாகிறது.
சரியான ஆவணங்களுடன் விண்ணப்பிப்பதன் மூலம் விசா நிராகரிப்புகளைத் தவிர்த்து, ஐரோப்பியப் பயணங்களை எளிதாக்க முடியும்.