டெல்லி-என்சிஆர் காற்று மாசுபாடு: நுரையீரலை மட்டுமல்ல, இதயத்தையும் ரத்த நாளங்களையும் பாதிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
டெல்லி NCR பகுதிகளில் தீபாவளிக்கு பிந்தைய நச்சுப் புகைமூட்டம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், காற்றின் தரக் குறியீடு (AQI) 'மோசம்' மற்றும் 'மிக மோசம்' ஆகிய பிரிவுகளில் நீடிக்கிறது. இந்த நச்சுக் காற்றினால் ஏற்படும் பாதிப்புகள் வெறும் சுவாசப் பிரச்சினைகளோடு நின்றுவிடாமல், மனித உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சாகேத் மேக்ஸ் ஸ்மார்ட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் உள்மருத்துவ துறை தலைவர் டாக்டர் ஆர்.எஸ். மிஸ்ரா, டெல்லி காற்று மாசுபாடு என்பது இனி பருவகால அசௌகரியம் மட்டுமல்ல; அது அனைத்து வயதினரையும் பாதிக்கும் ஒரு தீவிர பொது சுகாதார அவசரநிலை எனக் குறிப்பிட்டுள்ளார்.
PM2.5 நுண்துகள்கள்
நுரையீரலை தாண்டி இதயத்தைத் தாக்கும் PM2.5 நுண்துகள்கள்
தொடர் இருமல், தொண்டை எரிச்சல், கண் எரிச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை உடனடி அறிகுறிகளாகத் தெரிந்தாலும், கண்ணுக்கு தெரியாத நுண்துகள்கள் உடலுக்குள் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
"காற்று மாசுபாட்டின் விளைவுகள் நுரையீரலை தாண்டியும் செல்கின்றன. குறிப்பாக PM2.5 போன்ற மிக நுண்ணிய துகள்கள் நுரையீரலின் ஆழம் வரை சென்று நேரடியாக ரத்த ஓட்டத்தில் கலக்கின்றன. இது உடலில் வீக்கத்தை தூண்டி, இதயம் மற்றும் ரத்த நாளங்களுக்கு கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்கிறது."
நீண்டகாலம் இந்த நச்சுக் காற்றை சுவாசிப்பதால் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதயக் கோளாறுகள் ஏற்படும் அபாயம் கணிசமாக அதிகரிக்கிறது.
ஏற்கனவே இதய நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மிக அதிக ஆபத்து பிரிவில் உள்ளனர்.
தற்காப்பு
காற்று மாசுபாட்டிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?
பட்டாசு புகை, வாகன போக்குவரத்து, கட்டுமானத் தூசி மற்றும் கழிவுகளை எரிப்பது ஆகியவற்றுடன், குளிர்ந்த வெப்பநிலை மற்றும் குறைந்த காற்றின் வேகம் சேர்வதால் நச்சுத் துகள்கள் தரையிலேயே தங்கிவிடுகின்றன.
இதிலிருந்து தற்காத்துக்கொள்ள வெளிப்புற உடற்பயிற்சிகளைத் தவிர்க்கவும். அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் காற்று மாசு உச்சத்தில் இருக்கும் என்பதால், அந்த நேரங்களில் வெளிப்புற நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும். வீட்டின் ஜன்னல்களை மூடி வைக்கவும்.
வெளியே செல்லும்போது N95 முகக்கவசங்களை அணிய வேண்டும்.
ஆஸ்துமா மற்றும் COPD நோயாளிகள் மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளைத் தவறாமல் எடுத்துக்கொள்வதுடன், இன்ஹேலர்களை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும்.