கருவில் இருக்கும் சிசுவிற்கு ரத்தமாற்றம் செய்யமுடியுமா? சாதித்து காட்டிய AIIMS மருத்துவர்கள்
இன்னும் உலகில் ஜனிக்காத, கருவில் இருக்கும் சிசுவிற்கு அரிய வகை ரத்தத்தை transfusion செய்துள்ளனர் AIIMS மருத்துவர்கள். நடமாடும் மனிதர்களுக்கு மட்டுமே ரத்தமாற்றம் செய்யமுடியும் என்ற நிலையை இது மாற்றியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் இரத்த வங்கிக்கு, ஒரு அரியவகை இரத்தக் குழுவைக் கோரி அழைப்பு வந்தது. ஹரியானாவைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டதால், கருவை அகற்ற அவசர இரத்தமாற்றம் தேவைப்பட்டது. அவரது ஹீமோகுளோபின் ஒரு டெசிலிட்டருக்கு 6 கிராம் (g/dl) சாதாரண 12-15g/dl வரம்பிற்கு எதிராக இருந்தது. அந்த பெண்ணிற்கு அரிதான ரத்த வகை இருப்பதாகவும், கடுமையான ரத்த சோகை இருப்பதாகவும் கண்டறியப்பட்டது.
தாய்க்கும் சேய்க்கும் இணக்கமில்லாத ரத்த வகை
அந்தப் பெண்ணுக்கு அரிதான இரத்த வகை (D--) இருந்தது. சத்து குறைபாடு மற்றும் ரத்த சோகை காரணமாக அப்பெண்ணின் முந்தைய ஏழு கர்ப்பங்கள் கலைந்துள்ளன. மறுபுறம் கருவிலிருந்து சிசுவின் ரத்த வகை வேறு என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே களமிறங்கிய எய்ம்ஸ் குழு, intrauterine transfusion மூலமாக தாய்க்கு சிறப்பு இரத்த அலகுகளை வழங்கியது. "தாய் மற்றும் பிறக்காத குழந்தையின் இரத்தக் குழு இணக்கமற்றதாக இருந்தது. அதையொட்டி, குழந்தையின் வளர்ச்சிக்கான நிலை கடினமாக இருந்தது "என்று சிகிச்சையளித்த மகப்பேறு மருத்துவர் கூறுகிறார். சிவப்பு அணுக்கள் இணக்கமின்மை காரணமாக, கருவில் உள்ள குழந்தைக்கு, இரத்த சோகை, மஞ்சள் காமாலை, இதய செயலிழப்பு மற்றும் குழந்தையின் இறப்புக்கு வழிவகுக்கும்.
WHO ஆதரவுடன் செயல்பட்ட எய்ம்ஸ்
அப்பெண்ணின் எட்டாவது கர்ப்பத்தில், ஐந்தாவது மாதத்தில் குழந்தைக்கு ஏற்கனவே இரத்த சோகை இருப்பது கண்டறியப்பட்டது. இப்பெண்ணின் முந்தைய கர்ப்பத்தின் போதே அவரின் அரிய ரத்த வகை பற்றி தெரிந்திருந்ததால், ரத்த மாதிரியை ஐக்கிய இராச்சியத்தின் சர்வதேச இரத்தக் குழு குறிப்பு ஆய்வகத்திற்கு அனுப்பி, ரத்தத்திற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்ததது. இதனையடுத்து WHO-ஆதரவு ஆய்வகம், ஒரே இரத்தக் குழுவைக் கொண்ட நாடுகளின் பட்டியலை அனுப்பியது. பட்டியலில் சுமார் 10 நாடுகளின் பெயர்கள் இருந்ததால், இந்தியாவிற்கு அருகில் இருந்த ஜப்பான்-ஐ தேர்வு செய்து நன்கொடையாளர்களை தொடர்பு கொண்டது மருத்துவர்கள் குழு.
கருப்பையக இரத்தமாற்றம்
கர்ப்பத்தைத் தக்கவைக்க, தாயின் தொப்புள் கொடியின் மூலம் குழந்தைக்கு ரத்தம் கொடுக்க திட்டமிடப்பட்டது. இந்த சிறப்பு முறை மூலம் பெறப்பட்ட இரத்த அலகுகள் கருப்பையக இரத்தமாற்றமாக(intrauterine transfusion) வழங்கப்பட்டது. இதனால், கடுமையான இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட சிசுவின் ஆரோக்கியத்தையும் உயிரையும் காப்பாற்றமுடிந்தது என்கிறார்கள் மருத்துவர்கள். கருவிலிருந்து சிசு, தாயின் கருப்பையில் ஆறு இரத்தமாற்றங்களைப் பெற்றது மற்றும் அதன் விளைவாக ஹைட்ரோப்களின் நிலை (இதய செயலிழப்பு) இயல்பு நிலைக்கு திரும்பியது. இறுதியாக கர்ப்பத்தில் எட்டு மாதங்கள் வரை நீடித்த குழந்தை, சிசேரியன் மூலம் பிரசவிக்கப்பட்டது. இது இந்தியாவில் Rh 17 Ag காரணமாக அலோயிம்யூனிசேஷன் செய்யப்பட்ட வழக்கில் வெற்றிகரமான முதல் வழக்கு மற்றும் உலகில் எட்டாவது வழக்கு.