LOADING...
அமித் ஷா தடுத்தும் அண்ணாமலை பிடிவாதம்? பாஜவிலிருந்து விலகி 'விஜய்' பாணியில் பயணம்?
5 பக்கங்கள் கொண்ட விரிவான ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளார் அண்ணாமலை

அமித் ஷா தடுத்தும் அண்ணாமலை பிடிவாதம்? பாஜவிலிருந்து விலகி 'விஜய்' பாணியில் பயணம்?

எழுதியவர் Venkatalakshmi V
Jun 03, 2026
09:33 am

செய்தி முன்னோட்டம்

தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவரான அண்ணாமலை, பாரதிய ஜனதா கட்சியிலிருந்து முழுமையாக விலகும் தனது இறுதி முடிவை டெல்லி மேலிடத்திடம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினை நேரில் சந்தித்த அண்ணாமலை, தனது விலகலுக்கான காரணங்களை விளக்கி 5 பக்கங்கள் கொண்ட விரிவான ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளார். அண்ணாமலை தனது கடிதத்தில், கடந்த நான்கு ஆண்டுகளாகத் தனக்கு மாநிலத் தலைவர் பொறுப்பு வழங்கிய மத்திய தலைமைக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், கட்சியில் தான் தொடர்ந்து ஓரங்கட்டப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். 2024 மக்களவைத் தேர்தலில் 11 சதவீதமாக இருந்த பாஜகவின் வாக்கு வங்கி, அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெறும் 3 சதவீதமாகச் சரிந்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புகார்

அண்ணாமலையின் புகார்

அதிமுகவுடன் தொடர்ந்து கூட்டணி வைத்தது மற்றும் கட்சியின் தவறான உத்திகளுமே இந்த படுதோல்விக்குக் காரணம் என்றும், இதனால் சட்டமன்றத்தில் கட்சியின் பலம் 4-லிருந்து 1 ஆகக் குறைந்துவிட்டதாகவும் அவர் மேலிடத்திடம் அடுக்கடுக்கான புகார்களை வாசித்துள்ளார். தேசியத் தலைவரைச் சந்தித்த சில மணி நேரங்களிலேயே, நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் அவரது இல்லத்தில் அண்ணாமலை சந்தித்துப் பேசினார். அண்ணாமலைக்கு தமிழகத்தில் இருக்கும் இளைஞர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வட்டத்தை நன்கு அறிந்துள்ள டெல்லி மேலிடம், அவர் வெளியேறினால் கட்சிக்குப் பெரும் பின்னடைவு ஏற்படும் என அஞ்சுகிறது.

பேச்சுவார்த்தை

அமித் ஷா முன்னிலையில் சமாதானப் பேச்சுவார்த்தை

அண்ணாமலையின் ராஜினாமாவை ஏற்க மறுத்த அமித் ஷா, அவருக்குத் தேசிய அளவில் முக்கியப் பொறுப்பு வழங்க முன்வந்தார். மேலும், தற்போதைய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் அவசரமாக டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு, இரு தரப்பையும் நேருக்கு நேர் அமர வைத்து சமாதானம் பேசும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. டெல்லி தலைமையின் சமாதான முயற்சிகளையும், தேசியப் பொறுப்புகளையும் ஏற்க அண்ணாமலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. தமிழக அரசியல் களம் நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழக' எழுச்சிக்குப் பின் முற்றிலும் மாறிவிட்டதாக நம்பும் அண்ணாமலை, மாற்று அரசியலை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளார். முதற்கட்டமாக ஒரு பெரிய மக்கள் இயக்கத்தை தொடங்கி, பின்னர் அதனைத் தனிக்கட்சியாக மாற்ற அவர் திட்டமிட்டுள்ளார்.

Advertisement