விஜயகாந்த் அரசியல் வரலாறு - தேமுதிக கட்சி துவங்கியது எப்போது ?
பிரபல நடிகராகவும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் மதுரை திருமங்கலத்தில் அழகர்சாமி-ஆண்டாள் தம்பதியருக்கு 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி பிறந்தார். சிறுவயதில் இருந்தே அவருக்கு சினிமாவில் நாட்டம் அதிகமிருந்த காரணத்தினால் 10ம் வகுப்போடு தனது படிப்பினை நிறுத்தி கொண்டார். தனது தந்தையின் அரிசி ஆலையில் வேலைபார்த்து கொண்டிருந்த இவர் தனது நண்பர்களின் தூண்டலால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டு சென்னை வந்தடைந்தார். பல்வேறு அவமானங்கள் மற்றும் புறக்கணிப்புகளுக்கு பின்னர், 1979ம் ஆண்டு 'இனிக்கும் இளமை' என்னும் திரைப்படம் மூலம் சினிமா துறையில் தனது பயணத்தினை துவங்கினார்.
2005ம் ஆண்டு கட்சி துவங்கினார்
சினிமாத்துறையில் அசூர வளர்ச்சி பெற்ற அவர், அரசியலில் ஆர்வம் கொண்டு 2005ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி மதுரையில் பிரம்மாண்ட மாநாடு ஒன்றினை ஏற்பாடு செய்து, தனது தேசிய முற்போக்கு திராவிட கழகம்(தேமுதிக) என்னும் பெயரில் கட்சி துவங்கினார். தனது ரசிகர் மன்ற கொடியினையே கட்சி கொடியாக அறிவித்தார். கட்சி துவங்கிய ஓராண்டு காலத்திற்குள்ளேயே 2006ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் தனியாக போட்டியிட்டு 232 தொகுதிகளில் தனது வேட்பாளர்களை நியமித்தார். தனது தொகுதியான விருத்தாசத்தில் பெரும் வெற்றியினையும் பெற்று பல அரசியல் தலைவர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். மற்ற வேட்பாளர்கள் தோற்றாலும் 8.4% என்னும் கணிசமான வாக்குகளை பெற்றார்.
2011ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக'வுடன் கூட்டணி
தொடர்ந்து, 2009ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் மீண்டும் தனித்து போட்டியிட்டு தோல்வியை தழுவினார். ஆனால் அவரது கட்சி 10% வாக்குகளை பெற்றுத்தந்தது. பிறகு, சட்டமன்ற தேர்தல் 2011ம் ஆண்டு நடந்த நிலையில், அதில் முதன்முறையாக அதிமுக கட்சியோடு கூட்டணி வைத்து போட்டியிட்டார். அத்தேர்தலில் 29 இடங்களில் வெற்றிபெற்ற தேமுதிக, திமுக கட்சியினை பின்னுக்கு தள்ளியது. அந்த வெற்றியினையடுத்து அவர் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரானார். அப்போதைய காலகட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர்களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோருக்கு இணையாக தனது அரசியல் சாம்ராஜ்யத்தினை நடத்தினார். மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை துவக்கினார். இந்நிலையில், விஜயகாந்த் உடல்நிலையும் பாதிப்படைய துவங்கியது. அவரது அரசியல் வாழ்க்கையிலும் அவர் தொடர்ந்து பின்னடைவினை கண்டார்.
தொடர்ந்து படுதோல்விகளை சந்தித்தார் விஜயகாந்த்
எனினும், சோர்வடையாமல் தனது அரசியல் பயணத்தில் 2014 நாடாளுமன்ற தேர்தல், 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரை போட்டியிட்ட அவருக்கு படுதோல்வியே மிஞ்சியது. 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து, ஓர் வேட்பாளராக களம் இறங்கி போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து அவருக்கு மருத்துவ சிகிச்சைகள் தேவைப்பட்டது, அவ்வப்போது மருத்துவமனை சென்று வீடு திரும்புவது வழக்கமானது. அண்மையில் கூட அவர் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூச்சு திணறல், சளி, இரும்பல் உள்ளிட்டவைகளுக்கு தொடர்ந்து 2 வாரத்திற்கு மேல் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
தனது 71ம் வயதில் காலமானார்
அதன் பின்னர், இவரது முன்னிலையில், கடந்த 13ம் தேதி தேமுதிக சார்பில் பொதுக்குழு கூட்டப்பட்டு அதில் பிரேமலதா விஜயகாந்த் தேமுதிக கட்சி பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். இதனிடையே, அவர் மீண்டும் நேற்று முன்தினம் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைகளை முடித்து கொண்டு மீண்டும் அவர் வீடு திரும்புவார் என்று கட்சி சார்பில் அறிக்கையும் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று(டிச.,28) காலை அவர் உயிரிழந்துள்ளார். இவரது மறைவு இவரது கட்சி தொண்டர்கள், பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா வட்டாரங்கள், பொது மக்கள் அனைத்து தரப்பிலும் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.