LOADING...
விஜய்யின் வசம் நிதித்துறை; தவெக அமைச்சரவை முழு பட்டியல் இதுதானோ?
தவெக அமைச்சரவைப் பட்டியல் தயாரிப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன

விஜய்யின் வசம் நிதித்துறை; தவெக அமைச்சரவை முழு பட்டியல் இதுதானோ?

எழுதியவர் Venkatalakshmi V
May 06, 2026
11:03 am

செய்தி முன்னோட்டம்

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உள்கூடத்தில், அமைச்சரவைப் பட்டியல் தயாரிப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. பனையூர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைகளில், வழக்கமான அரசியல் நடைமுறைகளை உடைத்து அதிரடியான பல முடிவுகளை விஜய் எடுத்து வருவதாகத் தெரிகிறது. பொதுவாக முதலமைச்சர்கள் வசம் உள்துறை மட்டுமே இருக்கும் நிலையில், விஜய் மாநிலத்தின் நிதித்துறையையும் தன் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும், ஊழலற்ற நிதி மேலாண்மையையும் உறுதி செய்யவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அமைச்சரவை

அமைச்சரவை ரேஸில் முந்தும் பெயர்கள்

அமைச்சரவைப் பட்டியலில் அனுபவம் வாய்ந்த ஜெ.சி.டி. பிரபாகரன் சபாநாயகர் பதவிக்குப் பரிசீலிக்கப்படுகிறார். விஜய்யின் நம்பிக்கைக்குரிய புஸ்ஸி ஆனந்த் நகராட்சி நிர்வாகத் துறையையும், ஆதவ் அர்ஜுன் மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறையையும் குறிவைத்துக் காய் நகர்த்தி வருகின்றனர். எனினும், மின்சாரத் துறைக்கு நிர்மல் குமாரும் போட்டியிடுவதால் அங்கு இழுபறி நீடிக்கிறது. மூத்த அரசியல்வாதி செங்கோட்டையனுக்கு பொதுப்பணித்துறை (PWD) வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிக்கல்

மாவட்டவாரியான பிரதிநிதித்துவமும் சிக்கல்களும்

"ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு அமைச்சர்" என்ற ஃபார்முலாவை விஜய் கையில் எடுத்துள்ளார். இதனால், சென்னையில் ஏற்கனவே மூவருக்குப் பதவி உறுதியான நிலையில், ஆர்.கே. நகரில் வென்ற மரியா வில்சனுக்கு அமைச்சரவையில் இடம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அதேபோல், ஒரு தொகுதியில் கூட தவெக வெற்றி பெறாத தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இருக்காது என்ற அதிரடி முடிவையும் தலைமை எடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. வீட்டுவசதி வாரியம், பள்ளிக் கல்வி மற்றும் போக்குவரத்து போன்ற முக்கியத் துறைகளுக்குக் கடும் போட்டி நிலவி வரும் சூழலில், சமூக நீதி மற்றும் பிராந்திய சமநிலையைப் பேணி இறுதிப் பட்டியலை விஜய் மே 7-ஆம் தேதிக்குள் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement