தமிழகத்தில் 118 மேஜிக் எண் இலக்கு: இடைத்தேர்தல் வெற்றி தவெகவிற்கு எவ்வளவு முக்கியம்?
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசியலில் தற்போதைய சூழல் பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு தற்போது 107 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது. சட்டமன்றத்தில் ஒவ்வொரு மசோதாவை நிறைவேற்றவும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை நம்பியிருக்க வேண்டிய சூழல் உள்ளதால், 118 என்ற மேஜிக் எண்ணை தொட்டுத் தனிப்பெரும்பான்மை அரசை அமைக்க தவெக தலைமை தீவிர வியூகம் வகுத்துள்ளது.
இடைத்தேர்தல்
இடைத்தேர்தல் களம் மற்றும் சட்டசபை பலம்
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் விஜய் நேரடியாக களமிறங்கி நான்கு நாட்கள் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.
இந்த இரு தொகுதிகளிலும் வெற்றி பெறுவதன் மூலம் தவெகவின் சட்டமன்ற பலம் 109 ஆக உயரும்.
அதனைத் தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த காமராஜ் தவெகவில் இணைவதன் மூலம் சட்டசபை பலம் உடனடியாக 110 ஆக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டம்
115 இடங்களை நோக்கிய அடுத்த கட்ட நகர்வு
இடைத்தேர்தல் முடிவுகளுக்கு பிறகு காலியாக உள்ள மீதமுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் களம் தயாராகும்.
அந்த 5 இடங்களையும் கைப்பற்றுவதன் மூலம் கட்சியின் பலம் 115-ஐத் தொடும்.
இதன் மூலம் தனிப்பெரும்பான்மை பெற தேவையான 118 இடங்களை அடைய வெறும் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே தேவைப்படுவார்கள்.
ஆளும் கட்சியின் மீதான மக்கள் செல்வாக்கு இதன் மூலம் மேலும் அதிகரிக்கும் எனத் கட்சித் தலைமை நம்புகிறது.
எதிர்க்கட்சி
எதிர்க்கட்சிகளில் ஏற்படும் நகர்வுகள்
அதிமுகவிலிருந்து மேலும் பல சட்டமன்ற உறுப்பினர்கள் விலகி தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் சிக்கல்கள் ஏதுமின்றி இருக்க, அதிமுகவின் மொத்த சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஒரே முடிவை எடுத்து நகர்வதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நகர்வு முழுமை பெற்றால் தவெக மிக எளிதாக 118 என்ற எட்டக்கூடிய இலக்கைக் கடந்துவிடும்.
சட்டமன்றத்தில் 118 என்ற இடங்களை தனித்து எட்டும் பட்சத்தில், எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் சிறுபான்மை அரசு என்ற விமர்சனம் உடையும்.
கூட்டணிக் கட்சிகளின் நிபந்தனைகளுக்கு அடிபணிய வேண்டிய அவசியம் இல்லாததால், அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் மக்கள் சார்ந்த சட்டங்களை எந்தவிதத் தயக்கமுமின்றி நடைமுறைப்படுத்த முடியும்.