TVK 108 இடங்களை ஜெயித்திருந்தாலும், சட்டசபையில் வரப்போவது 106 இடங்களே; என்ன கணக்கு?
செய்தி முன்னோட்டம்
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகள், 1952-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக ஒரு 'தொங்கு சட்டமன்ற' (Hung Assembly) சூழலை உருவாக்கியுள்ளன. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் 10-11 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கட்டாயமாகியுள்ளது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகள் ஜெயித்திருந்தாலும், சட்டசபையில் நுழைய போவது என்னமோ 106 MLA க்கள் தான். அது என்ன கணக்கு?
சபாநாயகர் தேர்தல்
சபாநாயகர் தேர்தல்: விஜய்க்கு வைக்கப்படும் 'செக்'
பெரம்பூர், திருச்சி என இரு தொகுதிகளிலும் விஜய் வெற்றி பெற்றிருந்தாலும், ஏதேனும் ஒரு தொகுதியை தான் அவர் பிரதிநிதித்துவம் செய்ய முடியும். அதனால் அங்கே ஒரு இடம் காலியாகும். அடுத்ததாக சபாநாயகர் தேர்வு. ஆளுநர் விஜய்யை ஆட்சியமைக்க அழைத்தாலும், சட்டசபையில் அவர் தனது பலத்தை நிரூபிக்கும் முன் சபாநாயகரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த பொது வேட்பாளர் அவரது கட்சியிலிருந்து தேர்வு செய்யப்படும் பட்சத்தில், அவர் TVKவை பிரதிநிதித்துவம் செய்ய முடியாது. ஆனால் அதே நேரத்தில் மேஜிக் நம்பரும் ஒன்று குறையும். அதனால், விஜய் பெரும்பான்மை பெற தேவை 117 MLA க்களின் ஆதரவே! அதில் சொந்த கட்சி வேட்பாளர்கள் 106. இதர கட்சியிலிருந்து 10 -11 MLA க்கள் ஆதரவு தர வேண்டும்.
மாற்றங்கள்
தமிழக அரசியலில் ஏற்படப்போகும் மாற்றங்கள்
இந்தத் தேர்தல் முடிவுகள் திராவிடக் கட்சிகளுக்கு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கை மணியாகும். குறிப்பாக, கோட்டை என கருதப்பட்ட சென்னையில் திமுக படுதோல்வியைச் சந்தித்துள்ளதும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொளத்தூரில் தோற்றுப்போனதும் தமிழக அரசியலில் ஒரு நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் இப்போது ஒரு 'கிங் மேக்கராக' மட்டுமன்றி, 'கிங்' ஆகவும் மாற வேண்டுமானால், காங்கிரஸ் மற்றும் பாமக போன்ற கட்சிகளைத் தன் பக்கம் இழுப்பதுடன், சபாநாயகர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வியூகத்தை முறியடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஒருவேளை சபாநாயகர் தேர்தலில் வென்று, நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் முறியடித்துவிட்டால், அடுத்த ஓராண்டுக்கு விஜய்யின் ஆட்சிக்குப் பெரிய ஆபத்து இருக்காது.